Advertisement
Advertisement

பா.ஜ.க வழக்கறிஞரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் சந்தானத்திற்கு முன்ஜாமீன்

பணம் கொடுக்கல் வாங்கலில் வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், நடிகர் சந்தானத்திற்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இன்னோவேட்டிவ் கட்டுமான நிறுவனத்தின் மேலாளர் சண்முகசுந்தரத்திடம் திருமணம் மண்டபம் கட்டுவதற்காக தாம் கொடுத்த 3 கோடி ரூபாய் பணத்தை நடிகர் சந்தானம், சில தினங்களுக்கு முன்பு, திருப்பி கேட்டபோது பரஸ்பரம் வாக்குவாதம் ஏற்பட்ட போது, சண்முகசுந்தரத்துக்கு ஆதரவாக பேசிய வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பவரை நடிகர் சந்தானம் கடுமையாக தாக்கினார் என்பது புகார். இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில், நடிகர் சந்தானம் மனு செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆதிநாதன் முன் வெள்ளிக்கிழமை 2ஆவது நாளாக நடைபெற்றது. அப்போது, நீதிமன்ற உத்தரவுபடி பதிலளித்த காவல்துறையினர், வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் தற்போது உள்நோயாளியாக சிகிச்சை பெறவில்லை எனக் கூறினார். இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும், எனவே, முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், நடிகர் சந்தானம் தரப்பில் ஆஜரான, வழக்கறிஞர் பாலு வாதிட்டார்.

இதையடுத்து, நடிகர் சந்தானத்திற்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி, உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிநாதன் உத்தரவிட்டார். மேலும், வளசரவாக்கம் காவல்நிலையத்தில் 2 வாரங்களுக்கு ஆஜராகி கையெழுந்திட வேண்டும் என்றும், தேவைப்படும் போது விசாரணை அதிகாரி அழைத்தால் விசாரணைக்கு நடிகர் சந்தானம் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி ஆதிநாதன் நிபந்தனை விதித்தார். மேலும், சட்சிகளை கலைக்கவோ, வழக்குகளை சீர்க்குலைக்கும் நடவடிக்கையிலோ நடிகர் சந்தானம் ஈடுபடக் கூடாது என்றும் நீதிபதி ஆதிநாதன் உத்தரவிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன