Advertisement

பாலியல் வழக்கில் சாமியார் குர்மித்திற்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை – 30 லட்சம் ரூபாய் அபராதம்

பாலியல் பலாத்கார வழக்கில், சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, கைதிகளுக்கான சீருடையுடன் சாமியார் சிறையில் அடைக்கப்பட்டார்.

பதினைந்து ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாலியல் பலாத்கார வழக்கில், தேரா சச்சா சவுதா என்ற சமயப்பிரிவின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என, ஹரியானா மாநில பஞ்ச்குலா சி.பி.ஐ. நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை விவரம் திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.

ரோக்தக் சிறை வளாகத்திலே தற்காலிக நீதிமன்ற அறையை அமைத்து, அங்கேயே தண்டனை அறிவிக்கப்பட்டது. முன்னதாக தண்டனை தொடர்பாக இருதரப்பிலும் 10 நிமிடங்கள் வரை வாதங்களை முன்வைக்க நீதிபதி ஜக்தீப்சிங் அனுமதி அளித்தார்.

அப்போது சாமியாருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சி.பி.ஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், ராம் ரஹீம் ஆற்றியிருக்கும் சமூகப் பணிகளைக் கருத்தில் கொண்டு, அவருக்கு குறைந்த தண்டனை அளிக்க வேண்டும் என அவரது தரப்பில் வாதிடப்பட்டது.

நீதிபதியை நோக்கி கைகூப்பி, தன்னை மன்னித்து தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று சாமியார் ராம் ரஹீம சிங்கும் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார். ஆனால் பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு கருணை காட்ட முடியாது என்று கூறிய நீதிபதி ஜக்தீப் சிங், குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு இரண்டு பாலியல் பலாத்கார வழக்குகளிலும் தலா பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 30 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

அபராதத் தொகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 14 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டார். மொத்தம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 30 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டதை அடுத்து, தரையில் விழுந்து கண்ணீர் விட்டு கதறிய குர்மீத் ராம் ரஹீம் சிங், அந்த அறையில் இருந்து வெளியேற மறுத்து அடம்பிடித்து, தன்னை மன்னியுங்கள் என கூச்சலிட்டபடி அழத்தொடங்கினார்.

இதனால் அவரை காவலர்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். பின்னர், வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின்னர், கைதிகளுக்கான சீருடை வழங்கப்பட்டு சாமியார் ராம் ரஹீம் சிங் சிறையில் அடைக்கப்பட்டார்.

பாலியல் பலாத்கார வழக்கில் அவர் குற்றவாளி என கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டபோது, ஹரியானாவில் கலவரம் வெடித்தது. பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களிலும் அவரது ஆதரவாளர்கள் ஆங்காங்கே வன்முறையில் இறங்கினர்.

இதன் காரணமாக, குர்மீத்துக்கு செல்வாக்கு இல்லாத பகுதியான ரோக்தக் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். தண்டனை அறிவிப்புக்கு, முன்னரும் பின்னரும் ரோக்தக் சிறை வளாகப் பகுதியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன