பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலி

கடலூர் மோகினிப்பாலம் அருகே, நகராட்சியின் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் கொடிக்கால் குப்பத்தை சேர்ந்த வேலு, அப்பாகுட்டி மற்றும் சொரியாங்குப்பத்தை சேர்ந்த முருகன் ஆகிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். உரிய பாதுகாப்பின்றி பாதாள சாக்கடை கால்வாய் உள்ளே இறங்கியதால் தொழிலாளர்கள் வேலு, முருகன் ஆகியோர், விஷவாயு தாக்கி மூர்ச்சையற்றுக் கிடந்துள்ளனர். இதைக்கண்டு அருகிலிருந்த தொழிலாளி அப்பாகுட்டி, அவர்களை காப்பாற்ற முயன்றபோது அவரும் பாதாள சாக்கடைக்குள் மூர்ச்சையாகி விழுந்துள்ளார்.
இதைக்கண்ட பொதுமக்கள், தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் வேலு மற்றும் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அப்பாகுட்டியை மீட்டு, கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தனர். பாதாள சாக்கடையில் விஷவாயு உள்ளதா என்பதை கண்டறியாமல், உரிய பாதுகாப்பின்றி துப்புரவு தொழிலாளர்கள் இறங்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சாக்கடையை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்த தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு ஒன்றில், இயந்திரங்கள் மூலமாக சாக்கடைக் கழிவுகள் அகற்றப்படும் என தமிழக அரசு உறுதி அளித்த பின்னரும் இத்தகைய சம்பவங்கள் நிகழ்வது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன