Advertisement

பல் மருத்துவ மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகையின் மகன்

சென்னை திருமங்கலத்தில் காதலிக்க மறுத்ததால் தனியார் மருத்துவ கல்லூரி மாணவியின் வீட்டில் புகுந்து கொலை மிரட்டல் விடுத்த நடிகை புவனேஸ்வரியின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்த 23 வயதான இளம் பெண் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில் பயின்று வருகிறார். சில மாதங்களுக்கு முன் பேஸ் புக்கில் அறிமுகமான மிதுன் சீனிவாசன் என்ற பொறியியல் கல்லூரி மாணவனுடன் அப்பெண் நட்பாக பழகி வந்துள்ளார். இந்த நிலையில் தன்னுடன் பழகி வரும் மிதுன் நடிகை புவனேஸ்வரியின் மகன் என்பது மாணவிக்கு தெரிய வந்துள்ளது.

மேலும் மிதுன் மீது இலங்கையை சேர்ந்த இளம் பெண்ணை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக வழக்கு இருப்பதையும் அப் பெண் அறிந்துள்ளார். இதனை தொடர்ந்து மிதுன் சீனிவாசனுடனான பழக்கத்தை மாணவி முறித்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. பின்னர் மாணவியை செல்போனில் தொடர்பு கொண்ட மிதுன் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி தொந்தரவு செய்துள்ளார். அதனை ஏற்க மாணவி மறுத்ததால், அவரது வீட்டிற்கு சென்ற மிதுன் தன்னை காதலிக்கவில்லை என்றால் நுங்கம்பாக்கத்தில் கொலை செய்யப்பட்ட ஸ்வாதி நிலை ஏற்படும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அச்சமடைந்த மாணவியின் பெற்றோர் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து மருத்துவ மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து நடிகை புவனேஸ்வரியின் மகன் மிதுனை போலீசார் கைது செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன