Advertisement

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி வெட்டிக் கொலை

சென்னை மேற்கு மாம்பலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி, மகளின் கண் எதிரே சக ரவுடிகளால் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டார்.

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த கந்தன் அதே பகுதியை சேர்ந்த ரவுடி லோகாவின் கூட்டாளி ஆவார். கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய கந்தன், ரவுடி லோகாவிடமிருந்து அண்மையில் விலகி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், தமது மகளை கல்லூரிக்கு விடுவதற்கு இரு சக்கர வாகனத்தில் இன்று காலை கந்தன் சென்று கொண்டிருந்தார். முத்தாலம்மன் கோயில் எதிரே வந்தபோது, அவர்களை வழிமறித்த ஒரு கும்பல் கந்தனை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் கந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதலின்போது படுகாயமடைந்த அவரது மகள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த குமரன் நகர் போலீசார், கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ரவுடி லோகா தமது கூட்டாளிகளுடன் வந்து கந்தனை கொலை செய்தது தெரியவந்தது. கடந்த ஜூலை மாதம் தாம்பரம் அருகே சித்தாலப்பாக்கத்தில் ரவுடி லோகாவை மாம்பலம் போலீசார் கைது செய்தனர். பின்னர் வெளியில் வந்த லோகா, கந்தன் காட்டிக்கொடுத்ததால் தான் கைது செய்யப்பட்டதாக ஆத்திரத்துடன் திரிந்து வந்துள்ளார். இதன் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், ரவுடி லோகா மற்றும் அவரது கூட்டாளிகள் பிடிபட்டால் தான் கொலைக்கான காரணம் தெரியவரும்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன