பருவமழையை சமாளிக்க அனைத்து துறைகளும் தயார்நிலையில் இருக்க வேண்டும் – முதலமைச்சர் அறிவுறுத்தல்

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பருவமழையின் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில், அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே, நாகை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் நேற்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது, வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, வரும் வாரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக செயல்படுத்த அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவது, கடலோர மாவட்டங்களில் தாழ்வான பகுதி விவசாய நிலங்களில் நீர் தேங்கினால் அதை வெளியேற்றி உரமிட்டு பயிரைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். சம்பா பயிர் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்திய முதலமைச்சர், கால்நடைகளுக்கு தொற்று நோய் ஏற்படாத வண்ணம் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றார்.

போதிய மருந்துகளும், பணியாளர்களும் இருப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்ட அவர், நிவாரணமுகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, மருத்துவம் உள்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்திதரவும் உத்தரவிட்டார். பருவமழைப் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான மேலும் பல அறிவுரைகளையும் முதலமைச்சர் பழனிசாமி அதிகாரிகளுக்கு வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன