பயிற்சியாளர் தேர்வு குறித்த சேவாக் கருத்து முட்டாள்தனமானது – கங்குலி

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக தேர்வு செய்யப்படாதது குறித்து சேவாக் முட்டாள்தனமாக பேசுவதாக, சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவியில் இருந்து அணில் கும்ப்ளே விலகியதை அடுத்து, புதிய பயிற்சியாளராக சேவாக் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கங்குலி, சச்சின், லட்சுமணன் அடங்கிய ஆலோசனைக் குழுவினர், ரவி சாஸ்திரியை புதிய பயிற்சியாளராக தேர்வு செய்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த வீரேந்திர சேவாக், இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் நெருக்கமாக இல்லாத காரணத்தால், தான் தேர்வு செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் பயிற்சியாளரை தேர்வு செய்வோர் மிகவும் அதிகாரம் படைத்தவர்களாக இருப்பதாக கூறிய சேவாக், இனி ஒருபோதும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கப் போவதில்லை என்றும் கூறியிருந்தார். இது குறித்து விளக்கம் அளித்துள்ள, இந்திய கிரிக்கெட் அணி ஆலோசனைக் குழுவில் ஒருவரான கங்குலி, சேவாக் முட்டாள்தனமாக பேசுவதாகவும், அது குறித்து மேலும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன