தீவிரவாதத்தை ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் – பிரதமர் மோடி

பயங்கரவாதத்தை ஆசிய நாடுகள் ஒன்றுபட்டு எதிர்த்துப் போராட வேண்டிய தருணம் வந்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெறும் ஆசியான் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக ஆசிய நாடுகள் தனித்தனியாக கடுமையான போராட்டங்களை நடத்தி வருவதாக தெரிவித்தார். பயங்கரவாதத்தின் சவாலை ஆசிய நாடுகள் ஒன்று பட்டு எதிர்கொள்ள வேண்டிய தருணம் தற்போது வந்திருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஆசிய பிராந்தியத்தின் அமைதிக்கும், வளர்ச்சிக்கும் உதவியாக இருக்க இந்தியா உறுதி பூண்டிருப்பதாகவும் கூறினார். கிழக்காசிய நாடுகளுடனான உறவு குறித்த இந்தியாவின் ((Act East Policy)) ஆக்ட் ஈஸ்ட் பாலிசி என்ற கொள்கைத் திட்டம், ஒட்டுமொத்த ஆசிய நாடுகளுக்குமான வகையில் மேம்படுத்தப்பட்டிருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். அடுத்த ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள ஆசியான் உச்சி மாநாட்டிற்கு வருகை தரும் ஆசிய நாட்டுத் தலைவர்களை வரவேற்க இந்திய மக்கள் தயாராக இருப்பதாகவும் பிரதமர் மோடி தமது உரையில் குறிப்பிட்டார்.

ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக மூன்று நாள் பயணமாக ஞாயிறன்று பிலிப்பைன்ஸ் சென்ற பிரதமர் மோடி, அதன் ஒரு பகுதியாக பல்வேறு நாட்டுத் தலைவர்களையும் சந்தித்து பேசினார். திங்கள் கிழமை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்த பிரதமர், செவ்வாய்க்கிழமை ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல்லுடன் பேச்சு நடத்தினார். மேலும், வியட்நாம் பிரதமர் குயன் சுவான் ((Nguyen Suan)), ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, புருனை சுல்தான் ஹசனல் போல்கியா, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் ஆகிய சர்வதேசத் தலைவர்களை சந்தித்து, பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமர் மோடி பேச்சு நடத்தினார். திட்டமிட்டபடி நிகழ்ச்சிகள் முடிவடைந்ததை அடுத்து பிரதமர் மோடி மணிலாவில் இருந்து புறப்பட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன