Advertisement

நொய்யல் ஆற்றில் கலக்கும் சாயக்கழிவு – கழிவு நீர் வடிகால் போல பாய்ந்தோடும் அவல நிலை

திருப்பூர் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகள் கலப்பதால் நுரை பொங்கி கழிவு நீர் வடிகால் போல பாய்ந்தோடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நியூயார்க்கின் இதாகா பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் இருந்து பனி உருகி கால்வாயில் பாய்ந்து செல்லும் அற்புத காட்சி…

அதே போல பனிபாறைகள் உருகி செல்வது போல பொங்கும் நுரையுடன் பாய்ந்தோடுகிறது திருப்பூர் நொய்யல் ஆறு..!
நொய்யல் ஆறு… நியுயார்க் ஏரி நீர் போல இருப்பதாக பெருமைபட்டுக்கொள்ள வேண்டாம்…! மழை வெள்ளத்தால் தெளிவாக ஓடிக்கொண்டிருந்த நொய்யல் ஆற்றில் சாய ஆலைகள் கழிவு நீரை கலந்து விட்டதால் கழிவுகள் நுரையாக மாறி நொய்யல் இந்த பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது..!

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் வெள்ளிங்கிரி மலையில் உற்பத்தியாகி கோவை வழியாக திருப்பூர் ஈரோடு மாவட்டங்களை கடந்து கரூரில் காவிரியில் கலக்கிறது நொய்யல் ஆறு..!

கோவையில் நகைபட்டரை கழிவுகள், திருப்பூர், ஈரோட்டில் சாயப்பட்டறை கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு 100 சதவீதம் சுத்தமான கழிவு நீர் கால்வாயாகவே மாற்றப்பட்டுவிட்டது இந்த நொய்யல் ஆறு..! அண்மையில் பெய்த கனமழையால் நொய்யலில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆற்றில் தேங்கி இருந்த கழிவுகள் அடித்துச்செல்லப்பட்டன. இதனால் நொய்யல் தூய்மையானது..!
இந்த நிலையில் தான் 100க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் தங்கள் கழிவுகளை நள்ளிரவு நேரத்தில் கால்வாய்கள் வழியாக நொய்யலில் கலக்கவிட்டுள்ளன.

10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரத்துபாளையம் அணையில் தேக்கி குடி நீருக்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தப்பட்ட நொய்யல் ஆற்று தண்ணீர், இன்று சாயக்கழிகளால் எதற்கும் உபயோகப்படுத்த இயலாத அளவிற்கு கழிவு நீராகவே அணையில் தேக்கப்பட்டு கரூர் அருகே காவிரியில் கலந்து வீணாக கடலில் கலக்கிறது.

நொய்யல் ஆற்று நீர் கழிவு நீராக மாறியதால் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் முற்றிலும் மாசுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. தண்ணீருக்காக அண்டை மாநிலங்களில் கையேந்தி நிற்கும் நாம், நொய்யல் போன்ற நதிகளை சுத்தப்படுத்தி அணைகளில் தேக்கி வைத்தால் வருங்காலங்களில் அது குடி நீருக்காவது பயன்படும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அவ்வப்போது சட்ட விரோத சாய ஆலைகள் மீது நடவடிக்கைகள் எடுப்பது போன்று படம் காட்டுவதை விட்டு விட்டு உண்மையிலேயே நொய்யலில் சாயகழிவுகளை திறந்துவிடும் ஆலைகளுக்கு நிரந்தர தடை விதித்து நொய்யலை காக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன