நீர் தேங்கும் கழிவுப்பொருட்களை அகற்றாதவர்களுக்கு ரூபாய் 2000 அபராதம் – சென்னை மாநகராட்சி

கொசு உற்பத்தியாகும் வகையில் நடந்துகொண்டவர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. வாரந்தோறும் வியாழக்கிழமை டெங்கு விழிப்புணர்வு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை புதுப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்று, கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கைகள், டெங்கு காய்ச்சல் பரவும் வழிகள் மற்றும் அதைத்தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கினர். கொசு உற்பத்தியாகும் வகையில், தண்ணீர் தேங்கக்கூடிய கழிவுப்பொருட்களும் அகற்றப்பட்டன.

அப்போது பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், சென்னையில் கொசு உற்பத்தியாகும் வகையில் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டவர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

கொசு உற்பத்தியாவை தடுப்பதும், டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதும் சுகாதாரத்துறையினர் மட்டும் மேற்கொள்ளும் வேலை அல்ல என்றும், அது ஒரு சமுதாயத்தின் கூட்டுப் பணி என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன