நீட் விவகாரத்தால் சட்டப்பேரவையில் கடும் வாக்குவாதம்-திமுக வெளிநடப்பு

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு தவறிவிட்டதாக கூறி, ஆளுங்கட்சி உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினர், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில், நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக அரசு தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டினார். இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர், நாளை டெல்லி சென்று நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் தர இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், நீட் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறாமல் இருப்பதற்கு பொறுப்பேற்று அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால், ஆளுங்கட்சி மற்றும் திமுக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சட்டப்பேரவையில் இருந்து மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், நீட் விலக்கு விவகாரத்தில் தமிழக அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.
இதனிடையே, திமுகவினரைத் தொடர்ந்து காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன