Advertisement

நிஜத்தில் தீரனாக செயல்பட்டு, கொள்ளையர்களை வேட்டையாடி, சுற்றிவளைத்த காவல் அதிகாரி ஜாங்கிட்

2005 ஆண்டு தமிழகத்தை கதிகலங்க வைத்த வட மாநில பவுரியா கொள்ளையர்களின் அட்டகாசத்தைத் தழுவி எடுக்கப்பட்ட நடிகர் கார்த்தியின் தீரன் திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. நிஜத்தில் தீரனாக செயல்பட்டு, கொள்ளையர்களை வேட்டையாடி, சுற்றிவளைத்த காவல் அதிகாரி ஜாங்கிட்டின் திகில் அனுபவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி.

தீரன்…. நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியாகி உள்ள தமிழக காவல்துறையினருக்கு பெருமை சேர்க்கும் பரபரப்பான சாகச திரைப்படம்..!

2005 ஆம் ஆண்டில் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ.வாக இருந்த சுதர்சனம் கொல்லப்பட்ட பின்னர் தான், வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் லாரிகளில் கொடூரமான சமூக விரோதிகள் வந்து செல்வது அடையாளம் காணப்பட்டது.

1994 ல் இருந்து 2005ம் ஆண்டு வரை தமிழகத்தில் மட்டும் 24, ஆந்திராவில் 6, கர்நாடகாவில் ஒன்று ..! என கொலை-கொள்ளை சம்பவங்கள் குறித்து துப்புத் துலக்கியது குறித்து விவரிக்கிறார் அப்போதைய ஐ.ஜி நிஜ தீரன் எஸ்.ஆர் .ஜாங்கிட்….

கும்பிடிப்பூண்டி எம்.எல்.ஏ வீட்டில் கைப்பற்றப்பட்ட காலணி மற்றும் கைரேகைகளை மட்டுமே தடயமாக கொண்டு, இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க வட மாநிலங்களில் 10 மாதங்கள் நீண்ட தேடுதல் வேட்டை நடத்தியது ஜாங்கிட்டின் தனிப்படை..!

இறுதியில் இங்குள்ள வீடுகளை நோட்டமிட்டு கொடூர கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டது, வட மாநிலங்களில் இருந்து தமிழக தொழிற்சாலைகளுக்கு லாரிகளில் சரக்கு ஏற்றிவந்த பவுரியா கொள்ளையர்கள் என்பதை, ஆக்ரா சிறையில் சிக்கிய லஷ்மன் பவுரியா என்வரின் கைரேகையை வைத்து கண்டுபிடித்தது ஜாங்கிட்டின் தனிப்படை.

ஸ்ரீபெரும்புதூரில் கொள்ளை போன செல்போன் ஒன்றும், லஷ்மண் பவுரியா வீட்டில் கிடைத்த நோட்டு புத்தகம் ஒன்றின் கடைசி பக்கத்தில் குறித்து வைக்கப்பட்டிருந்த செல்போன் எண்களும்தான் இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்கள் என்கிறார் எஸ்.ஆர் ஜாங்கிட்

இறுதியில் 15 பேரை சுற்றிவளைத்து, இருவரை என்கவுண்டர் செய்து 13 பேரை கைது செய்து தமிழகத்திற்கு கொண்டு வந்தது ஜாங்கிட்டின் தனிப்படை. இந்த தனிப்படையில் ஜாங்கிட்டுடன், தற்போதைய விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார், அண்ணாநகர் துணை ஆணையர் டாக்டர் சுதாகர் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர்.

தீரன் படத்தின் இயக்குனர் சில வருடங்களுக்கு முன்பு, இந்த விவரங்களை தன்னிடம் கேட்டு தெரிந்து கொண்டதாகவும், அதனை சிறப்பாக படமாக்கி இருப்பதாகவும் பாராட்டு தெரிவித்தார் எஸ்.ஆர் ஜாங்கிட்..

வருடங்கள் 10 கடந்தாலும், தற்போதும் குற்றவழக்குகளை துப்பு துலக்குவதில் எஸ்.ஆர். ஜாங்கிட், மற்றும் அந்த தனிப்படையில் இடம் பெற்றிருந்த காவல்துறையினர் அனைவரும் அதே வேகத்துடன் இருப்பது தமிழக காவல்துறைக்கு சிறப்பு ..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன