Advertisement
Advertisement

திரைப்படத் தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை – மதுரை பைனான்சியர் அன்புச் செழியன் மீது வழக்குப் பதிவு

இயக்குனர் சசிக்குமாரின் அத்தை மகன் அசோக்குமார், நடிகரும், இயக்குனருமான சசிக்குமாரின் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன், தாரைதப்பட்டை, கிடாரி, பலே வெள்ளையதேவா, கொடிவீரன் உள்ளிட்ட படங்களை கம்பெனி புரொடக்சன்ஸ் எனும் நிறுவனத்தின் இணைதயாரிப்பாளராக இருந்து தயாரித்தவர். இந்த நிலையில் சசிகுமாரின் கொடி வீரன் என்ற படத்தை தயாரித்த அவர், அப்படத்தை அடுத்த வாரம் வெளியிடுவதற்குத் தேவையான பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

கொடி வீரன் படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியாது என்று கருதி செவ்வாய்கிழமை மாலை கம்பெனி புரொடக்சன் அலுவலகத்தில் அசோக்குமார் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார், அசோக்குமார் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில்

மதுரை சினிமா பைனான்சியர் அன்பு செழியனிடம் கடன் வாங்கி தாரைதப்பட்டை படத்தை சசிக்குமாருடன் இணைந்து அசோக்குமார் தயாரித்துள்ளது தெரிய வந்துள்ளது. படம் வெற்றி பெறாத காரணத்தினால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் வட்டியை மட்டும் அசோக்குமார் கட்டி வந்ததாகவும் கூறப்படுகின்றது. தொடர்ந்து வட்டி கட்ட முடியாத சூழலில் திட்டமிட்டபடி கொடிவீரன் படத்தையும் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டதால் அசோக்குமார் தற்கொலை முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது.

கம்பெனி புரடக்சன் அலுவலகத்தில் உள்ள சாமி படத்திற்கு பின் பக்கத்தில் இருந்து காவல்துறையினர் அசோக்குமார் கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வட்டிக்கு மேல் வட்டி கேட்டு மிரட்டியதால் தற்கொலை செய்து கொள்வதாக உருக்கமாக குறிப்பிட்டிருந்தார் அசோக்குமார்..!

வாங்கிய கடனுக்கு வட்டிக்கு மேல் வட்டி கட்டிய நிலையில் கடந்த ஆறு மாத காலமாக மதுரை அன்புச் செழியன் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்டதாக அசோக்குமார் கூறியுள்ளார். மேலும் கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் குடும்பத்து பெண்களை தூக்கப்போவதாக அன்புச் செழியன் ஆட்களை வைத்து மிரட்டியதாகவும் அசோக்குமார் கடிதத்தில் எழுதி வைத்துள்ளார். அதிகாரத்தில் இருப்பவர்கள், பிலிம் பெடரேசன் தலைவர் செல்வராஜ் என அனைவரும் அன்புச் செழியன் ஆட்களாக இருப்பதால் வேறு யாரிடமும் சென்று உதவி கேட்க முடியவில்லை என்று அசோக்குமார் கூறியுள்ளார்.

எனவே தான் கொலை அல்லது தற்கொலை என இரண்டில் ஒரு முடிவை எடுக்கும் நிலைக்கு தான் தள்ளப்பட்டதாக அசோக்குமார் தெரிவித்துள்ளார். கொலை செய்தால் கொலையுண்டவர்களின் குடும்பம் பிள்ளைகள் பாதிக்கப்படும் என்பதால், தற்கொலை முடிவை தேர்தெடுத்ததாக அசோக்குமார் கூறியுள்ளார்.
மேலும் இயக்குனர் சசிக்குமாரை கடவுளைவிட சிறந்த முதலாளி என்றும், பட தயாரிப்பு நிறுவனத்தை தான் கடனில் கொண்டு வந்து நிறுத்தி விட்டதாகவும் அசோக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சசிக்குமாரை சூழ்ச்சிக்காரர்களிடம் விட்டுச் செல்வதாகவும், தன்னை காப்பாற்றாத கடவுள், அவரையும் குடும்பத்தாரையும் காப்பாற்றுவார் என்றும், எதிலும் வெற்றிபெறாத தான் தற்கொலையில் தோற்க மாட்டேன் என்று அந்த கடிதத்தில் அசோக்குமார் எழுதியுள்ளார். மேலும் தன் உடலில் உள்ள காயங்கள், கடந்த சில காலமாய் தனக்கு தானே ஏற்படுத்தி கொண்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த இயக்குனர் சசிக்குமார், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், அசோக்குமாரை தற்கொலைக்கு தூண்டிய அன்புச் செழியன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சசிக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

தயாரிப்பாளர் அசோக்குமாரை தற்கொலைக்குத் தூண்டியதாக அன்புசெழியன் மீது வழக்கு பதிந்து காவல்துறையினர் விசாரித்து வருவதாக இயக்குனர் அமீர் தெரிவித்தார்

கடந்த 2003 ஆம் ஆண்டு சினிமா பைனான்சியர்களின் தொல்லை தாங்காமல் பிரபலத் தயாரிப்பாளர் ஜி.வி என்றழைக்கப்பட்ட ஜி. வெங்கடேஸ்வரன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அந்த சம்பவத்துக்கு பின்னர், தற்போது தயாரிப்பாளர்அசோக்குமார் உயிரை மாய்த்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன