நகைச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி புகார், நாதெள்ளா ஜுவல்லரி மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

நகைச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் நாதெள்ளா ஜுவல்லரி மீது மோசடி வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த நீலாம்பாள் என்பவர் உள்பட 17 பேர் தாக்கல் செய்த மனுவில், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள நாதெள்ளா ஜுவல்லரியில், ஜீரோ சதவீத நகை வாங்கும் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் பணம் கட்டி வந்ததாக குறிப்பிடப் பட்டிருந்தது. இதற்காக முதிர்ச்சி பணத்துக்கு, செய்கூலி, சேதாரம் இன்றி, நகை தருவதாக உறுதியளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், உறுதியளித்தபடி நகையை தராததோடு, 5 சதவீத வட்டியுடன் பணத்தைத் திருப்பி தருவதாக பல முறை உத்தரவாதம் அளித்து தாமதப்படுத்தியதாக மனுவில் கூறப்பட்டிருந்தது.

அக்டோபர் 23-ம் தேதி, நாதெள்ளாவின் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டதால், மோசடி குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், நடவடிக்கைக்கு உத்தரவிடுமாறும் மனுவில் கோரப்பட்டிருந்தது. நீதிபதி எம். எஸ். ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் அளித்த புகார் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும்படி, சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன