Advertisement
Advertisement

தொடங்கி 2 ஆண்டுகளை நெருங்கும் நிலையிலும் முடிக்கப்படாத பாதாள சாக்கடைத் திட்டம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்கப்பட்டு முடிவடையாத நிலையில், திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால், சாலைகள் முற்றிலும் சேதமடைந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

சிதம்பரம் நகராட்சியில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டம் மாநில அளவில் சிறப்பான திட்டமாகப் பார்க்கப்பட்டது. தற்போது பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப திட்டத்தை விரிவாக்கும் நோக்கோடு 18 மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டன.

65 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்ட இந்தத் திட்டப் பணிகள், நகர் முழுமைக்கும் செயல்படுத்த ஒரே ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. திட்டம் தொடங்கப்பட்டபோது சிதம்பரம் நகரிலுள்ள சாலைகள் அனைத்திலும் பள்ளங்கள் தோண்டப்பட்டது. ஆனால் தொடங்கி இரண்டாண்டுகளை நெருங்கும் நிலையிலும் பணிகளை முடிக்காததால், அந்தப் பள்ளங்களில் வாகனங்கள் விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் வாகனங்கள் செல்லும்போது எழும் கடுமையான புழுதி மண்டலம், பள்ளிக்குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு பல்வேறு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துவதாகவும் புகார் கூறப்படுகிறது.

ஏற்கெனவே போடப்பட்ட தரமற்ற சாலைகளும் அண்மையில் பெய்த மழை காரணமாக மேலும் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்துக்கே தகுதியற்றதாக மாறி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.

புகழ்பெற்ற நடராஜர் ஆலயத்தில் வரும் டிசம்பர் 16ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள ஆருத்ரா தரிசனத்தைக் காண ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் சாலை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன