Advertisement
Advertisement

தேனாம்பேட்டை காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் – 6 பேர் கைது

சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 13-ம் தேதி அதிகாலை 4 மணியளவில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதிர்ஷ்டவசமாக பெயர்ப் பலகையின் விளிம்பில் பட்டு, வாசலில் விழுந்து, பெட்ரோல் குண்டு வெடித்தது தெரியவந்தது.

காவல் நிலையத்தின் வெளியே இருந்த கண்காணிப்பு கேமராக்கள் முறையாக இயங்காமல் போக, உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் போனதால் இந்த விவகாரம் சட்டசபை வரை எதிரொலித்தது. இந்நிலையில் அரைகுறை காட்சியாக தெரிந்த சந்தேகப்படும் நபர் ஒருவரின் சிசிடிவி படத்தை வெளியிட்டு, அவர் மூலம் 6 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அதே பகுதியை சேர்ந்த டியோ மணி, கருக்கா வினோத் ஆகிய இருவரும் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்றும், பாண்டிபஜார் காவல் நிலையத்தில் இருவர் மீதும் கொலை மிரட்டல் வழக்கொன்றை பதிவு செய்து தேடி வர, கூட்டாளிகளோடு சேர்ந்து கொண்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்தை தாக்கியுள்ளதாக காவல் துறையினர் விளக்கமளித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 6 பேர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் டியோ மணி, கருக்கா வினோத் ஆகிய இருவரையும் குற்ற வழக்கிற்காக அடிக்கடி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்த ரவுடிகள் இருவரும் கூட்டாளிகளோடு தாக்குதல் திட்டத்தில் இறங்கியதாகவும் கூறப்படுகிறது. தேனாம்பேட்டை பகுதியில் அடிதடி, கொலை முயற்சி என குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் இருவரும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களையும் விற்று வந்துள்ளனர்.

இது தெரிந்த தேனாம்பேட்டை உதவி ஆய்வாளர் ஒருவரும், காவலர் ஒருவரும் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்காமல், மாமூல் கேட்டு தொந்தரவு செய்தததாகவும், காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்று தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதால் இருவரையும் குண்டர் தடுப்பு காவலில் சிறையிலடைப்போம் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ரவுடிகள் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் இருவருக்கும் அச்சத்தை ஏற்படுத்துவதோடு காவல் நிலையத்திற்கும் தீ வைத்து அவர்கள் வழக்கு தொடர்பான ஆவணங்களையும் அழிக்க வேண்டும் என சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.

அதன்படி சம்பவம் நடந்த அதிகாலை ரவுடிகள் இருவரும் தங்களது கூட்டாளிகளோடு சேர்ந்து கொண்டு காவல் நிலையத்தை கண்காணித்து வந்துள்ளனர். திட்டமிட்டப்படி காவல் நிலையத்தின் வெளியில் யாரும் இல்லாத நேரம் பார்த்து பெட்ரோல் குண்டுகளை வீச, அது அதிர்ஷ்டவசமாக பெயர் பலகையின் விளிம்பில் பட்டு கீழே விழுந்ததில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன