தூத்துக்குடி:நாசரேத் அருகே அய்யாவைகுண்டர் கோவிலை இடித்த அருள்வாக்கு சாமியார்..!

தூத்துக்குடி மாவட்டம் மூக்குபீறியில் அய்யா வைகுண்டர் கோவில் இடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அருள்வாக்கு சொல்வதாக கோவிலுக்குள் புகுந்த சாமியாரால் நிகழ்ந்த விபரீதம்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அடுத்து உள்ள மூக்கிபீறி கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்டர் கோவில் உள்ளது. 70 ஆண்டுகளுக்கு முன்பு சிறியதாக இருந்த கோவில் பக்தர்களின் நன்கொடையால் 2001 ஆம் ஆண்டு பெரிய கோவிலாக விரிவுபடுத்தப்பட்டு அன்னதானமும் நடத்தப்பட்டது.
அய்யா கோவில் தனக்கு சொந்தமானது என்று கோவிலை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட தொடங்கியதால் கோவில் நிர்வாகிகளுக்கும் சாமியார் அய்யனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நல்லான்விளை என்ற கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சாமியார் அய்யன், புதிதாக அய்யா கோவில் ஒன்றை கட்டியதாக கூறப்படுகிறது. தான் கட்டியுள்ள அய்யா கோவிலை பிரபலமாக்க, கடந்த சில தினங்களுக்கு முன்பு மூக்குபீறியில் உள்ள பழமையான அய்யா கோவிலை ஜே.சி.பி கொண்டு இடித்து தள்ளியதாக குற்றச்சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள்.
கோவிலை இடித்ததாக சாமியார் அய்யன், அவரது உதவியாளர் ஜெயபாக்கியம் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர். சாமியார் அய்யன், சசிகலா புஷ்பா எம்.பியின் ஆதரவாளர் என்பதால் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் வழக்கை கிடப்பில் போட்டு இருப்பதாக அந்த பகுதிமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கடந்த 2002 ஆம் ஆண்டில் அய்யா கோவிலுக்கு சாமி கும்பிட வந்த ஆறுமுகனேரி dcw தொழிற்சாலை சூப்பர் வைசரான அய்யன் என்பவர் தனது ஓய்வுக்கு பின்னர் அங்கு சாமி ஆடி அருள்வாக்கு சொன்னதால் அய்யன் சாமி என்று அழைக்கப்படுவதாக சுட்டிக்காட்டுகின்றனர் காவல்துறையினர். குழந்தை பாக்கியம் இல்லாமை, பில்லி, சூனியம், செய்வினை கோளாறுகள் , தொழில் நஷ்டம் அனைத்திற்கும் தீர்வு என்று கோவிலுக்கு வரும் பக்தர்களை நம்பவைத்து பணம் பறிப்பதில் சாமியார் கில்லாடி என்றும் பெண்களிடம் தங்கசங்கிலிகளையும், லட்சகணக்கில் பணத்தையும் காணிக்கையாக கேட்டு பெறுவது சாமியாரின் வழக்கம் என்றும் கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு அருள்வாக்கு சொல்வதாக கூறி, பக்தர் ஒருவரிடம் அவர் வந்த காரில் தோசம் இருப்பதாக கூறி அதனை பறித்துக்கொண்டதாகவும், போலீசில் புகார் அளித்ததால் அந்த காரை திருப்பி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கம் அளித்த சாமியார் அய்யன், முதலில் பாலிமர் செய்தியாளரிடம் கோவிலை இடித்ததை ஒப்புக்கொண்டார், பின்னர் தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று பல்டி அடித்தார். அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து தங்களது கோவிலை இடித்த சாமியார் அய்யனை கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவிலில் சாமி தரிசனம் செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், மூட நம்பிக்கையில் மூழ்கி இது போன்ற சாமியார்களை நம்பிச்சென்றால் பிரச்சனைகள் தீர்வதற்க்கு பதிலாக புதிய பிரச்சனைகளே உருவாக நேரிடும்..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன