Advertisement

தீபா வீட்டில் சோதனை நடத்த வந்து கைதான போலி அதிகாரிக்கும் மாதவனுக்கு தொடர்பில்லை – காவல்துறை

ஜெ.தீபாவின் வீட்டில் சோதனை நடத்திய போலி அதிகாரி பிரபாகரனுக்கும், மாதவனுக்கும் தொடர்பு இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றும், மாதவன் மீது பழிசுமத்தும் நோக்குடன் வேறு ஒரு நபர்தான் பிரபாகரனை ஏவியிருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தியாகராயநகரில் உள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபாவின் வீட்டிற்கு கடந்த சனிக்கிழமை அதிகாலை சென்ற நபர் தன்னை வருமான வரித்துறை அதிகாரி மித்தேஷ் குமார் என்று கூறிக் கொண்டு சோதனை நடத்தினார். சந்தேகத்தின் பேரில் போலீஸார் கெடுபிடியாக கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அந்த நபர் தப்பி ஓடினார். விசாரணையில் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபாகரன்தான் விசாரணை நடத்திய நபர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸாரிடம் சரணடைந்த பிரபாகரன் தனது வாக்குமூலத்தில், ஜெ.தீபாவின் கணவர் மாதவன்தான் வீட்டை சோதனையிடச் சொன்னதாக கூறினார். விழுப்புரம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள விடுதிகளில் மாதவனை தான் சந்தித்ததாகவும், சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக மாதவன் கூறியதன் பேரில், வருமான வரித்துறை அதிகாரியாக நடித்ததாக கூறியுள்ளார். இது மட்டுமின்றி வருமான வரித்துறை அதிகாரி என்ற பெயரில் போலி அடையாள அட்டை தயாரித்து கொரியரில் அனுப்பியதே மாதவன்தான் என்றும் வாக்குமூலம் அளித்தார்.

இதனையடுத்து பிரபாகரன் கூறிய தகவல்களை போலீஸார் சரிபார்த்ததில் முழுவதும் தவறான தகவல்களை அளித்து குழப்பியது தெரியவந்தது. மாதவனிடம் பிரபாகரன் செல்போனில் பேசியதற்கான எந்த ஆதாரத்தையும் வழங்க முடியவில்லை. இதே போன்று இருவரும் சந்தித்ததாக கூறப்படும் விடுதிகளிலும் சி.சி.டி.வி. ஆதாரங்கள் எதுவும் ஒத்துப்போகவில்லை. மேலும் வருமான வரித்துறை அதிகாரிக்கான போலி அடையாள அட்டையை கொரியரில் அனுப்பியதற்கான ஆதாரமும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் போலியான அடையாள அட்டையை இணையதளத்திலிருந்து பிரபாகரனே தனது கணினியில் தரவிறக்கம் செய்ததும் ஐ.பி. முகவரி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டை 2006ம் ஆண்டு டெல்லியில் சிக்கிய போலி அடையாள அட்டை கும்பலிடமிருந்து கைப்பற்றப்பட்டு இணையதளங்களில் வெளியானதாகும். அதில் மித்தேஷ் குமார் என்ற பெயரைக் கூட மாற்றாமல் பிரபாகரன் பயன்படுத்தியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக பொய்யான தகவல்களை கூறியிருப்பதால் மாதவனுக்கும் பிரபாகரனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறுவது பொய்யான தகவல் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பிரபாகரனை அனுப்பி மாதவனை சிக்க வைக்க முயற்சிப்பது யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மாதவனுக்கும் தீபாவுக்கும் தெரிந்த நபரே இந்த செயலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதனிடையே பிரபாகரனுக்கு உதவிய புதுச்சேரியைச் சேர்ந்த அச்சக உரிமையாளர் ஆனந்த வேலு என்பவரையும் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

One Response to தீபா வீட்டில் சோதனை நடத்த வந்து கைதான போலி அதிகாரிக்கும் மாதவனுக்கு தொடர்பில்லை – காவல்துறை

  1. முருகன் சொல்கிறார்:

    சந்தேகமே வேண்டாம், மாதவன் அவர்கள் சில நாட்களாக தனிக்கட்சி துவங்கி சிறப்பாக மக்கள் பணியாற்றி மக்களிடம் நல்ல பெயரை பெற்று வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல். தன் கணவன் என்று கூட பாராமல் அவரை அரசியலில் இருந்து வெளியேற்ற அவரது கார் ஓட்டுநர் ராஜா, தகவல் தொழில்நுட்ப பிரிவில் பொய்யான தகவல்களை மட்டுமே பரப்பிவரும் கோவிந்தன், திருச்சி லேண்ட் சக்தி மற்றும் சிவகுமார் ஆகியோரின் உதவியுடன் நடத்திய கேவலமான செயல். இது பழி போட ஏற்பாடு செய்தார்களா? அல்லது மாதவன் அவர்களை கொலை செய்ய அனுப்பி வைத்தார்களா என தீர விசாரித்தால் உண்மை தெரியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன