Advertisement

புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்

புத்தாண்டையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. லட்சக்கணக்கன பக்தர்கள் கடலில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக வினாயகர் கோவிலில் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதை முன்னிட்டு, போலீசார் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி. காமிராக்களும், கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த திரு உத்தரகோசமங்கை கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஒரே மரகதக்கல் நடராஜர் சிலையில் சந்தனக் காப்பு அகற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. ஒலி – ஒளியால் மரகதக் கல் சேதம் அடையும் என்பதால், ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு சந்தனக்காப்பிலேயே இருக்கும். சிறப்பு வழிபாடுகளைக் காண தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். பொதுமக்கள் மற்றும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் கூட்டமும், மீனாட்சியம்மன் கோயிலில் அதிகமாகக் காணப்படுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புத்தாண்டையொட்டி நாமக்கல்லில் உள்ள 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் அதிகாலையிலேயே வடைமாலையுடன் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் தொடங்கின. இதனைத் தொடர்ந்து தங்கக் கவசத்துடன் அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயர் சுவாமியை தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலங்களில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தகர்கள் வழிபட்டனர்.

புத்தாண்டையொட்டி தஞ்சை பெரிய கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சேலம் டவுனில் உள்ள ராஜகணபதி கோவிலில் சுவாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சேலம் குமாரசாமிப்பட்டி ஸ்ரீஎல்லைப் பிடாரி அம்மன் ஆலயத்தில் அம்மன்களுக்கு முத்து அலங்காரமும் தங்க கவச அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மேட்டூர் தூய மாதா விண்ணேற்பு ஆலயம், நல் மேய்ப்பர் ஆலயம், சி.ஐ.ஜி.எம் மிஷினரி ஆலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவனைக்காவல் அகிலாண்டேஸ்வர் ஜம்புகேஸ்வரர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், உறையூர் வெக்காளியம்மன் கோயில் உள்பட பல்வெறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன

இதேபோன்று திருச்சி மேலப்புதூர் ஆரோக்கிய அன்னை பேராலயம், பாலக்கரை சகாயமாதா தேவாலயம், எடத்தெரு பழைய கோயில், புத்தூர் பாத்திமா மாதா கோயில் சிம்கோ மீட்டர் ஜெகன்மாதா கோயில், ஸ்ரீரங்கம் அமல ஆசிரம அந்தோணியார் ஆலயம், காட்டூர் அந்தோணியார் கோயில் உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன.

கோவை புலியகுளம் முந்தி விநாயகர் திருக்கோவிலில், புத்தாண்டை ஒட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலை உள்ள இந்த கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மகாகவி பாரதியார் பாடல் இயற்றி வழிபட்ட புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில், புத்தாண்டையொட்டி விநாயகருக்கு தங்கக் கவசமும் வைரக் கிரீடமும் அணிவிக்கப்பட்டு அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

அறுபடை வீடுகளில் 4-ஆம் படை வீடான சுவாமிமலையில் புத்தாண்டையொட்டி முருகனுக்கு ராஜ அலங்காரத்தில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தமிழ் ஆண்டுகளைக் குறிக்கும் இந்த ஆலயத்திலுள்ள 64 படிகளுக்கும் பக்தர்கள் விளக்கேற்றி பூஜை செய்தனர்.

கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோவில், திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் கோவில், நாகநாத சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.

வரதராஜபெருமாள் கோவில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில், கச்சபேஸ்வரர் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், உலகளந்த பெருமாள் கோவில், திருப்போரூர் முருகன், வல்லக்கோட்டை முருகன், மாமல்லபுரம் தலசயனபெருமாள் கோவில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில், கோவிந்தவாடி அகரம் குரு கோயில் உட்பட மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 198 கோயில்களில் நேற்று நள்ளிரவு முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தூத்துக்குடியில் பழமை வாய்ந்த சங்கர ராமேஸ்வரர் கோயிலில் புத்தாண்டை ஒட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் புத்தாண்டையொட்டி கடலைக்காய்த் திருவிழா நடைபெற்றது. ஒசூர் ராஜகணபதி நகரிலுள்ள ஸ்ரீராஜகணபதி வரசித்தி ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயர் மீது நிலக்கடலையை எறிந்து பக்தர்கள் வழிபட்டனர்.

காலைமுதலே ஆஞ்சநேயருக்கும் கடலைக்காய்க்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், அதனை தொடர்ந்து பக்தர்கள் ஆஞ்சநேயர் மீது கடலைக்காய் எறிந்து வழிபட்டனர். பாரம்பரியமாக நடைபெறும் இந்த திருவிழாவின் மூலம் நாடும் விவசாயமும் செழிக்கும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

புத்தாண்டை முன்னிட்டு, வேலூர் கோட்டையிலுள்ள அகிலாண்டேசுவரி சமேத ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன

அரசமரப்பேட்டையிலுள்ள வல்லப விநாயகர் ஆலயத்தில் ஆஞ்சநேயரின் மார்பில் ஐயப்பன் குடிகொண்டிருப்பது போன்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டும் விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டும் வழிபாடுகள் நடைபெற்றன.

வேலூரில் உள்ள திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு வெள்ளிக்கவசத்துடன் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் புத்தாண்டையொட்டி கடலைக்காய்த் திருவிழா நடைபெற்றது. ஒசூர் ராஜகணபதி நகரிலுள்ள ஸ்ரீராஜகணபதி வரசித்தி ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயர் மீது நிலக்கடலையை எறிந்து பக்தர்கள் வழிபட்டனர்.

காலைமுதலே ஆஞ்சநேயருக்கும் கடலைக்காய்க்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், அதனை தொடர்ந்து பக்தர்கள் ஆஞ்சநேயர் மீது கடலைக்காய் எறிந்து வழிபட்டனர். பாரம்பரியமாக நடைபெறும் இந்த திருவிழாவின் மூலம் நாடும் விவசாயமும் செழிக்கும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன