Advertisement

திண்டுக்கல்லில் ஒரே நேரத்தில் துப்புரவு தொழிலாளிகள் மூன்று பேர் வெட்டிக் கொலை

திண்டுக்கல் நகர்ப்பகுதியில் வெவ்வேறு இடங்களில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவுப் பணியாளர்கள் 3 பேர் அடுத்தடுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் சோலைஹால் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், வீரா, சரவணன் ஆகியோர் திண்டுக்கல் மாகராட்சிக்கு ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வந்தனர்.

இன்று அதிகாலை திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்ற மூவரும் தங்களது துப்புரவு உபகரணங்களை எடுத்துக் கொண்டு பணிக்குச் சென்றனர். பாலமுருகன் திண்டுக்கல் – சிலுவத்தூர் சாலையிலும், வீரா திண்டுக்கல் – நத்தம் சாலையில் உள்ள நாகல்நகர் மேம்பாலம் அருகிலும், என்.வி.ஜி.பி.நகர் பகுதியில் சரவணனும் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காலை ஒன்பதரை மணியளவில் துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த இடங்களுக்கு சென்ற மர்ம கும்பல் மூவரையும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது. அடுத்தடுத்த கொலை சம்பவங்கள் குறித்த தகவல் பரவியதையடுத்து திண்டுக்கல் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து கொலை நடந்த இடங்களுக்குச் சென்ற போலீசார், கொலையானவர்களின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

கொலை நடந்த 3 இடங்களிலும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் நேரில் சென்று விசாரணை நடத்தினார். கொலையான பாலமுருகன் மீது ஏற்கனவே கொலை வழக்கு ஒன்று விசாரணையில் உள்ளதும், கொலை செய்யப்பட்ட வீரா மற்றும் சரவணன் சகோதரர்கள் என்பதும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்விரோதம் காரணமாக கொலைகள் நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஒரே கும்பல் கொலை சம்பவத்தை அரங்கேற்றியதா அல்லது வெவ்வேறு கும்பல்கள் கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே கொலைக்குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திண்டுக்கல் – திருச்சி சாலை சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சென்ற போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன