Advertisement

தாதா ஸ்ரீதர் தனபாலின் கூலிப்படையை சேர்ந்த 2 பேர் கைது

சர்வதேச போலீசாரால் தேடப்படும் தாதா ஸ்ரீதர் தனபாலின் கூலிப்படையை சேர்ந்த 2 பேர், சென்னையில் தொழில் அதிபரை கடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது சூதுகவ்வும் திரைபடத்தில் வரும் காட்சிகள்…. இதே போல கடத்தல் சம்பவம் ஒன்று சென்னை ஆர்.கே நகரில் அரங்கேறியது.

ஆர்.கே நகரை சேர்ந்த பக்கீர் முகமது..! என்ற காகித தொழிற்சாலை அதிபர் புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு மசூதிக்கு தொழுகைக்கு சென்றபோது, மர்ம கும்பலால் கடத்தப்பட்டார். அவரை விடுவிக்க அவரிடமே 80 லட்சம் ரூபாய் கேட்டு முடிவில் 3 லட்சம் ரூபாய் பறித்துக்கொண்டு அவரை விடுவித்துள்ளது கடத்தல் கும்பல்

வழக்கமாக பணம் கொடுக்காவிட்டால் கொலைசெய்து விடுவோம் என்று மிரட்டும் கும்பல்களுக்கு மத்தியில், எவ்வளவு பணம் கொடுக்க முடியும் என்று கடத்தப்பட்டவரிடமே பேரம் பேசி பணத்தை பெற்றுக்கொண்ட கடத்தல் கும்பலை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதில் வட சென்னை பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் காரில் சுற்றிய இருவர் சிக்கினர். விசாரணையில் அவர்கள் இருவரும் வேலூரை சேர்ந்த பாலு, சத்யா என்பதும், பக்கீர் முகமதுவை கடத்தி பணம் பறித்ததும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 85 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டது. இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது, சர்வதேச போலீசாரால் தேடப்படும் காஞ்சிபுரம் தாதா ஸ்ரீதர் தனபாலின் கூலிப்படையினர் என்பதை அறிந்து காவல்துறையினர் அதிர்ந்து போயினர்.

ஸ்ரீதர் தனபால் இருக்கும் போது செல்வச்செழிப்புடன் வலம் வந்த அவரது கூலிப்படையினர் அவன் தலைமறைவான பின் தற்போது போதிய வருமானமின்றி வழக்கு செலவுக்காக பிக்பாக்கெட், வழிப்பறி போன்ற குற்றங்களை செய்து வருவதாக கூறப்படுகிறது. காரில் பெரிய ரவுடிகளாய் வலம் வந்து விட்டு சிறிய சிறிய சம்பவங்களை செய்வதற்கு பதிலாக தொழில் அதிபர்களை கடத்தி பெரிய அளவில் பணம் பறிக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி தொழில் அதிபர் பக்கீர் முகமது செல்வச்செழிப்புடன் இருப்பதாக ஸ்ரீதரின் வலதுகையான வைத்தீஸ்வரன் தனது கூலிப்படைக்கு தகவல் கொடுத்துள்ளான். அதன்படி ஓட்டேரி சூர்யா, வேலூர் பாலு, சத்யா உள்ளிட்டோர் காரில் காத்திருந்து 2 நாட்கள் ஒத்திகை பார்த்து பக்கீர் முகமதுவை கடத்தி உள்ளனர். பக்கீர் முகமது பயந்து போய் பணத்தை கொடுத்து விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவரோ கொலை செய்தால் செய்து கொள்ளுங்கள் என்ற ரீதியில் பேசியதாலும் , காவல்துறையினர் கைகளில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகவும் அவர் கொடுத்ததை வாங்கிக் கொண்டு அவசர அவசரமாக அவரை விடுவித்ததாக பிடிபட்டவர்கள் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளனர். கடத்தலில் தொடர்புடைய 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுல்ள நிலையில் வைத்தீஸ்வரன், சூர்யா ஆகிய இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை, ஆள்கடத்தல், நிலங்களை மிரட்டி அபகரித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்படும் தாதா ஸ்ரீதர் தனபாலின் கூட்டாளிகள் சென்னையில் புகுந்து ஆள்கடத்தலில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன