தவறான தொடர்பு தகராறில் தொடர்பில்லாத நபர் கொலை

சென்னையில், மனைவியுடன் தவறான தொடர்பு வைத்திருந்த நபரைக் கொல்லச் சென்றவர், உடன் தங்கியிருந்த உறவினரைக் கொன்ற அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறி உள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் வியாபாரம் செய்து வரும் சசிகுமார், உறவினர் பழனிச்சாமியுடன் வாடகை வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில், பழனிச்சாமிக்கும் கோயம்பேடு மேட்டுகுளம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்ற பெண்ணுக்கும் தவறான தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இதை சரண்யாவின் கணவர் சிவபெருமாள் அடிக்கடி கண்டித்து வந்ததாகத் தெரிகிறது. ஆனாலும், பழனிச்சாமிக்கும் சரண்யாவுக்கும் இடையேயான தொடர்பு நீடித்து வந்திருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த சரண்யாவின் கணவர் சிவபெருமாள், தமது தம்பி டேவிட்டுடன் பழனிசாமியைக் கொல்வதற்காக அவர் தங்கி இருந்த வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, பழனிச்சாமி வெளியே சென்றுவிட, உறவினரான சசிகுமார் மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.

பழனிச்சாமி எங்கே என்று கேட்டு, சிவபெருமாளும், டேவிட்டும் சசிகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் தகராறாக மாறியதில், சசிகுமாரின் கழுத்தை நெரித்து சிவபெருமாளும், டேவிட்டும் கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், சசிகுமார் வைத்திருந்த 2 லட்சம் ரூபாயையும் திருடிக் கொண்டு, சிவபெருமாளும், டேவிட்டும் அங்கிருந்து தப்பி, தலைமறைவாகினர்.

பின்னர் போலீசாரால் கைப்பற்றப்பட்ட சசிகுமார் உடல் பிரேதபரிசோதனைக்குப் பிறகு அவரது சொந்த ஊரான திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக, சிவபெருமாளின் மனைவி சரண்யா, அவரது கள்ளக்காதலன் எனக் கூறப்படும் பழனிசாமி, சிவபெருமாள் தம்பி டேவிட்டின் மனைவி சங்கீதா ஆகியோரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன