Advertisement
Advertisement

தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் இருசக்கர வாகனங்களில் சென்ற இரண்டு பேர் பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பு

வேலூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லையை ஒட்டிய மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால், இருசக்கர வாகனங்களில் சென்ற இரண்டு பேர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தனர்.

ஆந்திர எல்லையை ஒட்டிய தமிழக பகுதியான வெலதிகாமணி பெண்டா மலைப்பகுதியில், கனமழை பெய்யும்போது காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுப்பதும் பின்னர் தண்ணீர் வடிந்து விடுவதும் வழக்கம். நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது தெரியாமல் நள்ளிரவில் அவ்வழியாக இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர் ஆற்றுப் பள்ளத்துக்குள் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

அதிகாலை 3 மணியளவில் அந்த வழியாக சென்ற டாடா ஏஸ் ஒன்றும் பள்ளத்துக்குள் விழுந்ததையடுத்தே ஆற்றுப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்த போது டாடா ஏஸ் வாகனம் தவிர ஏற்கனவே 4 இருசக்கர வாகனங்களும் அவற்றில் வந்த 4 பேரும் விழுந்து கிடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினரும் மீட்புக் குழுவினரும் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்.

உயிரிழந்து கிடந்த ஆம்பூர் பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ரஷித் மற்றும் குப்பம் தேவராஜபுரம் பகுதியைச்சேர்ந்த கோவிந்தன் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் காயமடைந்த 4 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் வாணியம்பாடியில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பத்துக்குச் செல்லும் பாதை துண்டிக்கப்பட்டதால் இரு மாநிலப் பேருந்துகளும் எல்லைப் பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன