Advertisement

தமிழ் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு வயல் காட்டில் இறங்கி வேலை செய்யும் வெளி நாட்டு மாணவிகள்..!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு விடுமுறையை கழிப்பதற்கு வந்துள்ள வெளி நாட்டு மாணவிகள் இருவர் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் இன்றைய மாணவிகள் முற்றிலும் மறந்து போன விவசாய பணிகளை காட்சிகளாக நினைவூட்டுகிறது…

தலைவிரி கோலம் இல்லை… கையில் செல்போன் இல்லை…. அந்த காலத்து கிராமத்து பெண்கள் போல அழகாக சேலை அணிந்து … அன்றாட விவசாய பணிகளை அலட்டாமல் மேற்கொள்ளும் இவர்கள் இருவரும் பள்ளிப்படிப்பை முடித்து விடுமுறையை பயனுள்ள வகையில் கழிப்பதற்காக தமிழகம் வந்துள்ள வெளி நாட்டு மாணவிகள்…!

ஒருவர் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் இருந்து வந்துள்ள மாணவி க்ளோவி எலிசபெத்..! மற்றொருவர் ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த மாணவி ஹன்னா ராஸ். இருவரும் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு இடையில் கிடைத்துள்ள ஒருவருட விடுமுறையை பயனுள்ள வகையில் செலவழிக்கும் வகையில் தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் முறைகளையும் இயற்கை விவசாயத்தையும் கற்றுக்கொள்ள தமிழகம் வந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கசுவா கிராமத்தில் அமைந்துள்ள சேவாலயா என்ற சமூக சேவை நிறுவனத்தில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்து தங்கி உள்ள இவர்கள், அந்த கிராமத்து பெண்களிடம் இருந்து இயற்கை விவசாயத்தையும், விவசாயம் தொடர்பான பணிகளையும் கற்றுவருகின்றனர்.

தமிழர்களின் பாரம்பரிய உடையான சேலை எந்த அளவிற்கு இவர்களை கவர்ந்ததோ அதே அளவிற்கு தமிழர்களின் விவசாய முறைகளும் கவர்ந்துள்ளதாக பெருமிதம் தெரிவிக்கின்றனர்.

வெண்டைக்காய் பறித்தல், முள்ளங்கி எடுத்தல், மிளகாய் பறித்தல் செடிகளுக்கு களை எடுத்தல், நீர் பாய்ச்சுதல் ,ஏர் உழுதல் என அனைத்து பணிகளையும் எந்த ஒரு கூச்சமும் இன்றி நம் ஊர் பெண்கள் போலவே செய்து வருகின்றனர்

விவசாயத்தோடு நிறுத்திவிடாமல் கோசாலையில் உள்ள மாடுகளுக்கு புல் அறுத்து வந்து கொடுக்கும் வேலையையும் மன நிறைவோடு செய்கின்றனர்

இதுவரை தங்க நகைகள் பற்றியே அறிந்திராத இருவரும், தங்கள் பாதங்களில் வெள்ளி கொலுசுடனும், காதில் தொங்கலுடனும், கழுத்தில் மெல்லிய சங்கிலியுடனும் தமிழ் பெண்கள் போல வலம் வருகின்றனர்.

விவசாயத்தை நேசிக்கும் அதே நேரத்தில் சேவாலயா தொண்டு நிறுவனம் நடத்தும் தொடக்க பள்ளியில், குழந்தைகளுக்கு எளிமையாக ஆங்கிலம் கற்கும் முறைகளையும் தரையில் அமர்ந்து கற்று தருகின்றார் எலிசபெத்..!

நம்ம ஊர் குழந்தைகளுக்கு ஆங்கிலம் சொல்லித்தரும் மாணவி எலிசபெத், தனக்கு தமிழ் மீதும், இந்துக்களின் தமிழ் கலாச்சாரத்தின் மீதும் தனியாத ஆர்வம் என்கிறார்

பாடத்தில் வரும் ஆங்கில பாடலை சொல்லிக்கொடுக்கும் முறை பார்த்து குழந்தைகள் இவர்களை நேசிக்க தொடங்கிவிட்டனர் என்றே சொல்ல வேண்டும்

இயற்கை வேளான்மையை ஆர்வத்துடன் கற்று கொள்வதாக பெருமிதம் கொள்கிறார் மாணவி ஹனா ராஸ்

செப்டம்பர் மாதம் நாடு திரும்ப உள்ள இவர்கள் இருவரும், நம்ம ஊர் மாணவிகளுக்கும் விவசாயத்தின் மீது முழுமையான ஈடுபாடு ஏற்படுத்துவதை குறிகோளாக வைத்துள்ளனர்…! விவசாயம் நமது வாழ்வு மட்டுமல்ல அனைத்திற்கும் ஆதாரம் என்பதை உணர வேண்டிய தருணம் இது..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன