தமிழக ஆளுநர் பன்வாரிலால் கோவையில் 2ம் நாளாக ஆய்வு

கோவையைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களிலும் ஆய்வு செய்யவுள்ளதாக தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் கூறியுள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரண்டுநாள் பயணமாக கோவை சென்றுள்ளார். முதல் நாளான நேற்று பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அவர், பிற்பகல் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அரசியல் கட்சியினரையும் சந்தித்தார்.

இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று காலை 7 மணிக்கு கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவறையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் காந்திபுரம் பேருந்து நிலைய பகுதியில் நடைபெறும் தூய்மை பணிகளை பார்வையிட்ட அவர், தானும் தூய்மை பணியினை மேற்கொண்டார்.
ஆளுநர் தூய்மை இந்தியா பணிகளை பார்வையிடுவதை முன்னிட்டு சிறிது நேரம் பேருந்துகள் ,பேருந்து நிலையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து பீளமேடு பகுதியில் உள்ள சன் ஷைன் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை செயல்பாடுகளை பார்வையிட்ட ஆளுநர், அங்கு இளம் தொழில்முனைவோருடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய ஆளுநர், வருடம் முழுவதும் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு நடத்தவுள்ளதாக கூறினார்.

நிகழ்ச்சியில் ஆளுநருடன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே அர்ஜூனன், மாவட்ட ஆட்சித் தலைவர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன