Advertisement

தமிழகத்தில் பரவும் டெங்கு :காத்துகொள்வது எப்படி?

தமிழகத்தில் சமீபகாலமாக டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமானோர் பாதிப்புக்குள்ளாகி வரும் நிலையில் சிக்கன் குனியாவும் தலைகாட்ட துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் ஒருவரை ஈடிஸ் எஜிப்தி என்ற கொசு கடித்தால் எளிதில் தொற்றிக்கொள்கிறது டெங்கு காய்ச்சல். டெங்கு காய்ச்சல் தாக்கப்பட்டவரின் இரத்தணுக்கள் மெல்லக்குறைந்து அவர்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகின்றது.

தமிழகத்தில் அண்மையில் பெய்த மழைகாரணமாக பரவலாக கொசு உற்பத்தி பெருகிவிட்டது. அதனை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் சென்னை,காஞ்சிபுரம், விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, திருவள்ளூர் , கடலூர், திருவண்ணாமலை, சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நூற்றுகணக்காணோர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக கூறப்படுகின்றது.

தினமும் ஏராளமானோர் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் காத்திருந்தாலும், அவர்களுக்கு டெங்குவை கண்டறியும் எலீசா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதில்லை, அப்படியே மேற்கொண்டாலும் பரிசோதனை முடிவுகளை தெரிவிப்பதில்லை என்றும் ஒருவித வைரஸால் பரவும் மர்மக்காய்ச்சல் என்று பொத்தாம் பொதுவாக மருத்துவர்கள் அலட்சியத்துடன் பதில் அளிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அரசு மருத்துவர்களின் இந்த அலட்சியத்தால் டெங்கு என்று கண்டறியப்படாத மர்மகாய்ச்சலுக்கு குழந்தைகளும் கர்ப்பிணிகளும் பலியாவது இன்றுவரை தொடர்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் ரம்யா என்பவர் காய்ச்சல் பாதிப்புக்குள்ளான தனது 3 வயது மகன் சிரஞ்சீவியை கடந்த 19 ந்தேதி சேர்த்திருந்தார்.

அந்த சிறுவனுக்கு என்ன காய்ச்சல் என்று கண்டறிய முறையான பரிசோதனைகள் ஏதும் செய்யப்படவில்லை என்று கூறப்படுகின்றது அரசு மருத்துவர்களின் இத்தகைய அலட்சியத்தால் சிறுவன் சிரஞ்சீவி பரிதாபமாக பலியானான்.

எந்த நோய் தாக்கி தன் மகன் இறந்தான் என்பது தெரியாமல் தவித்த சிறுவனின் தாயை அங்கும் இங்கும் அலைகழித்தனர் மருத்துவமனை ஊழியர்கள். மகனின் சடலத்துடன் அங்கேயே அமர்ந்து கதறியது சிகிச்சைக்குவந்த மற்ற நோயாளிகளின் உறவினர்களையும் கண்கலங்க செய்தது.

ஒருகட்டத்தில் போலீசாரின் உதவியுடன் சிறுவனின் சடலத்தை உடனடியாக எடுத்துச்செல்லும் படி விரட்டியதால் அங்கு வந்த சமூக ஆர்வலர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்

இதே நிலை தான் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் நடப்பதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. சுகாதாரத்துறையின் மெத்தனதால் டெங்கு மட்டுமல்லாமல் சிக்குன் குனியா காய்ச்சலும் வேகமாக பரவிவரும் நிலையில். டெங்குவில் இருந்து தப்பிக்க என்ன வழி என்பதை காண்போம்.

தொடர்ந்து மூன்று நாட்கள் காய்ச்சல் பின்னர் 3 முதல் 7 தினங்கள் வரை காய்ச்சல் இல்லாமல் உடல்வலியை கொடுத்தால் உடனடியாக இரத்த பரிசோதனையுடன் எலீசா என்ற டெங்கு பரிசோதனையும் செய்ய வேண்டியது அவசியம்.

டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்கள் மருந்துகளை எடுத்துக்கொள்வதை தவிர்த்து ரத்தத்தை சுத்திகரிக்கும் பப்பாளி இலைச்சாறு, நிலவேம்பு கசாயம் போன்றவற்றை பருகவேண்டும், நீர் ஆகாரத்தை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும், இளநீர், பழங்கள் சாப்பிடலாம்.

அதே நேரத்தில் மருத்துவர் ஆலோசனை இன்றி தாங்களாக மருந்துகளை உட்கொள்ளக்கூடாது என்கின்றனர் மருத்துவர்கள்.

அதே நேரத்தில் ஒவ்வொருவரும் வீடு மற்றும் வீட்டை சுற்றி மழை நீர் தேங்கும் வகையில் கிடக்கும் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் தேங்காய் சிரட்டை, இளநீர் கூடு, டயர்கள், உடைந்த பானைகள் போன்றவற்றில் மழைநீர் தேங்குவதை தடுத்தால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்கமுடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

வீட்டுக்குள் கொசுக்கள் நுழையாமல் இருக்க ஜன்னல்களில் வலைகள் அமைப்பதோடு, வீட்டில் உள்ள குடிநீர்தொட்டிகளில் அபேட் என்ற மருந்துகளை வாரத்திற்கு ஒருமுறை தெளிப்பதும் அவசியமாகிறது என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அரசு மருத்துவமனையின் அலட்சியத்தை கண்டு அஞ்சும் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் உயிரை காப்பாற்ற தனியார் மருத்துவமனைகளை நாடும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன