Advertisement

தஞ்சையில் மாயமான பள்ளி மாணவன் சடலமாக மீட்பு

தஞ்சையில் குடிபோதையில் கொன்று புதைத்த சிறுவனின் உடல் கொலையாளி அடையாளம் காட்டிய இடத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. நாஞ்சிக்கோட்டை சாலை செந்தமிழ் நகரைச் சேர்ந்த சிவக்குமாரின் மகன் கிஷோர், தஞ்சையில் உள்ள பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 23ஆம் தேதி மாலை வீட்டிலிருந்து நண்பர்களுடன் அருகே உள்ள மைதானத்திற்கு விளையாடச் சென்ற மாணவன் கிஷோர், அதன்பின்னர் வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடியும் மாணவன் குறித்த தகவல் கிடைக்காததால், சிவக்குமார் போலீசில் புகார் அளித்தார். மாணவன் குறித்து போலீசார் விசாரணை நடத்தி நிலையில், 24ஆம் தேதி மாலை, சிவக்குமாரின் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர் மாணவன் கிஷோரை தான் கடத்தி வைத்துள்ளதாகவும், பணம் கொடுத்தால் விடுவிப்பதாகவும் கூறியுள்ளனர். அந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்த போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவனை கைது செய்து விசாரணை செய்தனர்.

அப்போது மது போதையில் தாங்கள் மைதானத்தில் இருந்த போது வந்த சிறுவன் கிஷோரை அங்கு விளையாட வேண்டாம் என்று கூறியதாகவும், அதனை ஏற்காமல் கிஷோர் தொடர்ந்து அங்கு விளையாடியதால் தாக்கியதாகவும் அரவிந்த் கூறியுள்ளான். தாக்கிய போது கீழே விழுந்த கிஷோர் மரணம் அடைந்துவிட்டதால் அதிர்ச்சி அடைந்து சடலத்தை அருகே புதைத்துவிட்டதாகவும் அரவிந்த் தெரிவித்துள்ளான். போலீசாரின் கவனத்தை திசை திருப்ப கடத்தல் நாடகம் ஆடியதாகவும் அரவிந்த கூறியுள்ளார்.

இந்நிலையில் சிறுவன் கிஷோரின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காண்பதற்காக அரவிந்தை, போலீஸார் செந்தமிழ் நகருக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். அங்கு கிஷோரின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அவன் அடையாளம் காட்டியதையடுத்து, வருவாய்துறையினர் முன்னிலையில் உடலைத் தோண்டியெடுத்த போலீசார், உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் அரவிந்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சிறுவன் என்றும் பாராமல் தனது மகனைக் கொலைச் செய்த கொலையாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என, தந்தை சிவக்குமார் கோரிக்கைவிடுத்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன