Advertisement
Advertisement

தகவல்கள் திருடப்படுவதைத் தவிர்க்க டம்மி ஆதார் எண்களை வழங்குவது குறித்து அடையாள ஆணையம் பரிசீலனை

தகவல்கள் திருடப்படுவதைத் தவிர்க்கும் வகையில் டம்மி ஆதார் எண்களை வழங்குவது குறித்து அடையாள ஆணையம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில், மத்திய, மாநில அரசுகளின் 200க்கும் மேற்பட்ட இணையதளங்களில் ஆதார் பயனாளிகளின் முகவரி உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன. இதுபோல், வேறுசில ஹேக்கர்களும் ஆதார் தகவல்களைத் திருடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து, ஆதார் தகவல்கள் திருடப்படுவதைத் தவிர்க்கும் வகையில், பயனாளிகளுக்கு டம்மி எண்களைத் தருவது குறித்து அடையாள ஆணையம் ஆலோசித்து வருகிறது. வங்கிப் பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்துத் தேவைகளுக்கும் டம்மி ஆதார் எண்ணைப் பயன்படுத்த வகை செய்வது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது. OTP எனப்படும் ஒன்டைம் பாஸ்வேர்டு முறையில் அவ்வப்போது வெவ்வேறு டம்மி எண்களைப் பயனாளிகளுக்கு வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அடையாள ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதே நேரத்தில், உண்மையான ஆதார் எண் பயனாளிக்கும், அடையாள ஆணையத்திற்கும் மட்டுமே தெரியும் வகையில் ரகசியம் காக்கப்படும். இதன் மூலம், ஆதார் எண் பயனாளிகளின் நடவடிக்கைகளை மற்றவர்கள் பின்தொடர்வதையும், தகவல்களைத் திருடுவதையும் தடுக்க முடியும் என அடையாள ஆணையத்தின் அதிகாரிகள் கருதுகின்றனர். எனினும், இந்தத் திட்டம் குறித்து இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன