Advertisement

டெங்கு காய்ச்சலை குணப்படுத்துவதாக கூறி வசூல்வேட்டையில் தனியார் மருத்துவமனைகள்

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 19 பேரும், ஈரோட்டில் 11 பேரும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தனர். கன்னியாகுமரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தலா ஒருவர் பலியாகி உள்ளனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் மட்டும் தற்போது 88பேர் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 14 பேருக்கு டெங்கு உறுதி படுத்தப்பட்டுள்ளது.

தர்மபுரியில் 93 பேரும் கிருஷ்ணகிரியில் 70 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுள்ளனர். கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் 73 பேர் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். நாமக்கல் அரசு மருத்துவமனையில் மாணவர் ஒருவரும் மாணவி ஒருவரும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்கு 60 க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

அதிகபட்சமாக சேலத்தில் 105 குழந்தைகள் உள்பட 185 பேர் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர் அதில் 3 பேருக்கு டெங்கு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

சுகாதாரதுறையினரின் மெத்தனதால் கிராமப்பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கிராமப் பகுதிகளில் இருந்து டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளான நோயாளிகள் அதிக அளவில் வருவதாக மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

டெங்கு பாதிப்பை குறைத்து காட்டவேண்டும் என்பதற்காக அரசு மருத்துவமனைகளோ டெங்குவை கண்டறியும் எலீசா பரிசோதனையை மேற்க்கொள்வதில்லை , அப்படியே நடத்தப்பட்டாலும் பரிசோதனை முடிவுகளை தெரிவிப்பதில்ல்லை என்ற நிலை தொடர்கிறது.

இதனால் பலர் தங்களுக்கு வந்திருக்கும் மர்மக் காய்ச்சல் என்ன என்பதை கண்டறிய தனியார் ஆய்வு மையங்களையும், தனியார் மருத்துவ மனைகளையும் நாடுகின்றனர்.

தனியார் ஆய்வு மையங்கள் டெங்கு குறித்த ஆய்வு முடிவுகளை தெரிவிக்க 1500 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கின்றனர்.

அந்த ஆய்வு முடிவுகளின் படி டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் அதனை அரசு மருத்துவமனைகள் ஏற்றுக்கொள்வதில்லை.

வைரஸ் காய்ச்சல் என்று நாட்களை நகர்த்துவதில் தான் ஆர்வம் காட்டுகின்றன.

அதே நேரத்தில் தனியார் மருத்துவமனைகளோ அந்த ஆய்வு முடிவுகள் சரிதானா என்பதை சரிபார்பதாக கூறி 6 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக நோயாளிகளிடம் பணம் பறிப்பதில் ஆர்வம் காட்டுகின்றன.

டெங்கு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு மருந்து எதுவும் கிடையாது. தினமும் 8 லிட்டர் தண்ணீர், பழங்கள், நிலவேம்பு குடி நீர், பப்பாளி இலைச்சாறு போன்றவை மட்டுமே டெங்குவை குணப்படுத்தும்.

தினமும் ஒருமுறை நோயாளிக்கு ரத்தபரிசோதனை மேற்கொண்டு ரத்தணுக்கள் அதிகரித்து வருகிறதா ? என்பதை உறுதி செய்வதை தவிர மருத்துவமனைகள் வேறு எந்த நவீன சிகிச்சையும் செய்யவேண்டியதில்லை..!

ஆனால் 5 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டால் தனியார் மருத்துவமனைகளில் 25 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது

டெங்குவை பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள் தங்களை வளப்படுத்தி கொள்கின்றன என்று நோயாளிகளின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கிராமப்புற மக்கள் தங்கள் வீட்டை சுற்றி மழை நீர் தேங்கும் வகையில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளையும், இளநீர் கூடு போன்ற குப்பைகளையும் உடனடியாக அழித்து தூய்மையாக வைத்திருந்தால் மட்டுமே டெங்கு கொசு உற்பத்தியை தடுக்கவும், டெங்கு காய்ச்சல் பரவாமல் காத்துக்கொள்ளவும் முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன