டெங்கு காய்ச்சலால் பிளேட்லெட்ஸ் தேவை அதிகரிப்பு- கொடையாளிகள் தானம் செய்ய முன்வர அறிவுறுத்தல்

டெங்கு காய்ச்சல் கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், ரத்த வங்கிகளில், பிளேட்லெட்ஸ் எனப்படும் ரத்த தட்டணுக்களுக்கு தேவை பலமடங்கு அதிகரித்துள்ளதால், கொடையாளிகள் தட்டணுக்களை தானம் செய்ய முன்வர வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பினால், ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை கடுமையாக குறையும்போது அது உயிருக்கே அச்சுறுத்தலாக முடிகிறது.

ஆரோக்கியமான மனிதரின் உடலில், ஒரு மைக்ரோலிட்டர் ரத்தத்தில் 1.5 லட்சம் முதல் 4.5 லட்சம் வரை ரத்த தட்டணுக்கள் இருக்கும். ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கடுமையாக சரியும்போது, மூக்கு, வாயிலிருந்து ரத்தம் வடிவது, வயிற்று வலி, தொடர்ச்சியாக வாந்தி, தோலுக்கடியில் ரத்த கசிவு, நுரையீரல், கல்லீரல், இதய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்து, ரத்தக்கசிவு ஏற்படும்போது, நோயாளியைக் காப்பாற்ற ரத்த தட்டணுக்களை அதிகரிக்க வேண்டியது அவசியம். ரத்த தட்டணுக்களை பொறுத்தவரை, ரத்தத்தை தானமாகப் பெற்று அதிலிருந்து பிரித்தெடுத்து பயன்படுத்துவது ஒருமுறை. தானம் அளிப்பவரிடமிருந்து ரத்தத்தை எடுக்காமல் ரத்த தட்டணுக்களை மட்டும் பிரித்தெடுக்கும் முறையும் பயன்பாட்டில் உள்ளது.

450 மில்லி ரத்தத்தில் ஒரு யூனிட் அளவுக்கு அதாவது 50 மில்லி ரத்த தட்டணுக்கள் கிடைக்கும். இதை பாதிக்கப்பட்டவர் உடலில் ஏற்றினால், அவருக்கு 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை ரத்த தட்டணுக்கள் கிடைக்கும். எனவே நோயாளிகளாக உள்ள பெரியவர்களுக்கு 6 யூனிட் வரை ரத்த தட்டணுக்கள் தேவைப்படும். இதில் உள்ள மிகமுக்கியமான சிக்கல், ரத்த தட்டணுக்களை 5 நாட்களுக்கு மட்டுமே பாதுகாத்து வைக்க முடியும். அதன் பிறகு வீணாகி விடும்.

அதேசமயம், ரத்த தானம் அளிப்பவர்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறைதான் ரத்த தானம் செய்ய முடியும். ஆனால் ரத்த தட்டணுக்களை ஒரு மாதத்திற்கு நான்கு முறை தானம் செய்யலாம். எனவே, ரத்த தானம் செய்பவர்களை தற்போது உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப ரத்த தட்டணுக்களை மட்டுமே தானம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. 5 நாட்களுக்கு மட்டுமே ரத்த தட்டணுக்களை பாதுகாத்து வைக்க முடியும் என்பதால், தொடர்ச்சியாக சிறுசிறு அளவில் ரத்த தான முகாம்களை நடத்துமாறு அரசுக்கு சொந்தமான 98 ரத்த வங்கிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

வாரத்தில் இரு முறையாவது ரத்த தான முகாம் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, தமிழக அரசின் blood transfusion council தலைவர் கே.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். நகரங்களில் செயல்படும் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் சொந்தமாக ரத்த வங்கிகள் உண்டு. இத்தகைய மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், ரத்த தானம் செய்பவர்களை தற்போது ரத்த தட்டணுக்களை மட்டும் தானம் செய்யுமாறு அறிவுறுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரிய அளவிலான மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் இப்படி சமாளித்துக் கொள்கின்றன என்றாலும், சிறிய அளவிலான மருத்துவமனைகள் தனியார் ரத்த வங்கிகளையே சார்ந்திருக்கும் நிலை உள்ளது. எனவே அங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளும் ரத்த தட்டணுக்களுக்கு தனியார் ரத்த வங்கிகளில் கருணையை சார்ந்திருக்க வேண்டிய நிலை உருவாகிறது.

அரசுக்கு சொந்தமான 98 ரத்த வங்கிகளில், 34 ரத்த வங்கிகளில் மட்டுமே ரத்த தட்டணுக்களை பிரித்தெடுக்கும் கருவி உள்ளது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. எனவே ரத்த வங்கிகளில், ரத்த தட்டணுக்களை கேட்டு ஓயாமல் தொலைபேசிகள் ஒலித்துக் கொண்டேயிருப்பதோடு, தேவைக்கு ஏற்க ரத்த தட்டணுக்களை விநியோகிக்க முடியாமல் அவை திணறி வருகின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன