Advertisement

டெங்குவை மறைக்க முயன்று கொசுக்களை வளரவிட்ட சுகாதாரத்துறை

சென்னையில் 3 போலீசார் உள்பட 18 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொசு ஒழிப்புபடை அமைத்தும் தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியவில்லை. தமிழகத்தில் வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல் மேற்கு மண்டலத்தை உலுக்கி எடுத்து வருகின்றது.

ஒரே நாளில் 2 மாணவிகள் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். நாமக்கல்லில் 8 ஆம் வகுப்பு மாணவி காவ்யா என்பவரும், கோவை வடக்கு வெள்ளமடையை சேர்ந்த தாரணி என்ற 2 ஆம் வகுப்பு மாணவியும் டெங்கு காய்ச்சலுக்கு பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் குறித்து 24 மணி நேரத்தில் கண்டறியப்படும் என்று சொல்லப்பட்டாலும் டெங்கு அறிகுறி தென்பட்டால் கூட அதனை மறைத்து சிகிச்சை அளிக்க முயற்சிப்பதால் இந்த உயிர்பலி தொடர்வதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே டெங்கு காய்ச்சல் பதிப்புக்குள்ளாகி பலியானவர்களின் குடும்பத்துக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை, திருப்பூர், சேலம், தர்மபுரி , கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, நெல்லை, நாமக்கல் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கும், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கும் காய்ச்சல் பாதிப்புக்குள்ளானோர் வருகை உயர்ந்துள்ளது.

சென்னை ஆயுதப்படை காவலர்கள் சிபு, பார்த்திபன் மற்றும் வீராபுரம் பட்டாலியன் காவலர் சக்திவேல் ஆகிய 3 பேர் உள்பட 18 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றது.

இதில் காவல்துறையை சேர்ந்த 3 பேருக்கும் நடத்திய ரத்தபரிசோதனையில் டெங்குவின் பாதிப்பு அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள காவலர்கள் சென்னை எழும்பூர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு, பரங்கிமலை ஆயுதப்படை காவலர் குடியிருப்பு, வீராபுரம் தமிழ் நாடு சிறப்பு போலீஸ்படை பயிற்சி மையம் ஆகிய இடங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை சுகாதாரதுறையினர் முடுக்கி விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆரம்பத்தில் டெங்கு காய்ச்சல் இல்லை என்று மறைக்க முயன்ற சுகாதாரத்துறையின் மெத்தனதால் தமிழகத்தில் கட்டுபடுத்த முடியாத அளவுக்கு டெங்கு கொசுக்கள் பெருகிவிட்டதாகவும் அதன் காரணமாகவே தினம் தினம் உயிரிழப்புகள் நிகழ்வதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதற்கிடையே தாமதமாக விழித்துக்கொண்ட சுகாதாரதுறையினர் டெங்குவை கட்டுப்படுத்த ஊர் தோறும் கொசு ஒழிப்புபடை அமைத்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பதாக சுகாதாரதுறையினர் தற்போது ஒப்புக்கொண்டுள்ளனர்.

தாமதமான சுகாதாரத்துறையினரின் இந்த கொசு ஒழிப்பு நடவடிக்கையால் டெங்குவை முழுவதுமாக ஒழிக்க இன்னும் சில வாரங்கள் பிடிக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். அதே நேரத்தில் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு டெங்கு கொசுக்கள் உறபத்தியாவதை தடுத்தால் விரைவில் டெங்குவை விரட்ட முடியும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன