Advertisement

ஜாஸ் சினிமாஸ் நிர்வாகிகளிடம் விசாரணை – 11 திரையரங்குகளை வாங்கியது குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்க 2 நாட்கள் கெடு

சத்தியம் சினிமாஸ் நிறுவனத்திடம் இருந்து 11 திரையரங்குகளை வாங்கியது தொடர்பான ஆவணங்களை 2 நாட்களில் சமர்பிக்குமாறு விவேக்கிற்கு வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் வணிக வளாகத்தில் அமையவிருந்த சத்யம் சினிமாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 11 திரையரங்குகளை ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் வாங்கியது.

சசிகலாவின் அண்ணன் மகனும், இளவரசியின் மகனுமான விவேக், தலைமை செயல் அதிகாரியாக இருந்த இந்த ஜாஸ் நிறுவனத்திற்கு திரையரங்குகள் கைமாறியதில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் அப்போது சர்ச்சையை கிளப்பினர். இதற்கு விளக்கம் அளித்த ஜாஸ் நிறுவனம், திரையரங்குகளை விலைக்கு வாங்கவில்லை என்றும், 5 ஆண்டுகள் குத்தகைக்கு மட்டுமே வாங்கி இருப்பதாக தெரிவித்தது.

இந்த நிலையில் சசிகலாவின் உறவினர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், விவேக் தலைமை செயல் அதிகாரியாக உள்ள ஜாஸ் சினிமாஸ் நிறுவனமும் சிக்கியது. 5 நாட்கள் நடத்தப்பட்ட இந்த சோதனையில் சத்யம் சினிமாஸ் நிறுவனத்திடம் இருந்து ஜாஸ் நிறுவனத்திற்கு திரையரங்குகள் கைமாறியது தொடர்பாக தெளிவான ஆவணங்கள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரான விவேக்கிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், சத்யம் சினிமாஸ் நிறுவனத்திடம் இருந்து 11 திரையரங்கள் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்திற்கு கைமாறியது எவ்வாறு? விலைக்கு வாங்கப்பட்டதா? குத்தகைக்கு விடப்பட்டாதா? என விளக்கம் கேட்டு அது தொடர்பான ஆவணங்களை 2 நாட்களில் சமர்பிக்குமாறு விவேக்கிற்கு வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரான ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் மேலாளர் கனகராஜ் உள்ளிட்ட 3 நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. சத்யம் சினிமாஸ் நிறுவனத்திடமும் இது தொடர்பான ஆவணங்களை கோரியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன