Advertisement

சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை

சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், ஆதரவாளர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 1430 கோடி ரூபாய் மதிப்பு சொத்து ஆவணங்களின் அடிப்படையில், வருமான வரி புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்களை குறிவைத்து, வருமான வரித்துறை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, 187 இடங்களில் 5 நாட்களுக்கு பிரம்மாண்ட சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை மூலம் 7 கோடி ரூபாய் பணம், 5 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள நகைகள், அசையா சொத்துகள் மீது செய்யப்பட்ட விரிவான முதலீடுகள் பற்றிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஏராளமான வைர நகைகளும், 15 வங்கி லாக்கர்களும் முடக்கப்பட்டுள்ளன.

இதேபோல, கணக்கு காட்டுவதற்காக பெயரளவுக்கு செயல்பட்டு வந்த போலி நிறுவனங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆயிரத்து 430 கோடி ரூபாய் அளவுக்கு, கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு செய்யப்பட்ட வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோதனை குறித்து பேசிய விவேக், வருமான வரித்துறையினர் தன் வீட்டில் இருந்து எடுத்துச் சென்ற நகைகளுக்கு கணக்கு கேட்டிருப்பதாகவும், அவற்றை முறைப்படி அளிக்க உள்ளதாகவும் கூறினார்.

விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல, வருமான வரி புலனாய்வு துறை சம்மன் அடிப்படையில், ஜாஸ் சினிமாஸ் நிறுவன நிர்வாகிகள் 3 பேர் ஆஜராகியுள்ளனர்.

சுரானா கார்ப்பரேசன் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான விஜய் சுரானாவும் விசாரணைக்கு ஆஜரானார். பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுரானா கார்ப்பரேசன் நிறுவனத்திலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர். சசிகலா குடும்பத்தினருடனான வர்த்தக தொடர்புகள் மற்றும் முதலீடுகள் பற்றி சுரானா கார்ப்பரேசன் நிர்வாகியிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன