செம்மரம் வெட்ட, கடத்த வருகை தருபவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் – ஆந்திர ஐ.ஜி எச்சரிக்கை

ஆந்திராவுக்கு செம்மரம் கடத்த வருவோர் யாராக இருந்தாலும், அவர்களை சுட்டுக்கொல்ல இருப்பதாக அம்மாநில செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.காந்தாராவ் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பதியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.ஜி. காந்தாராவ், ராயலசீமாவின் சொத்தான செம்மரத்தை கடத்த வருவோர், நாட்டுத்துப்பாக்கியுடன் வருவதாக தெரிவித்தார்.

அண்மையில் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் 6 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறிய அவர், இந்த துப்பாக்கிகள் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தயாரிக்கப்படுவதாகவும் கூறினார்.

தமிழகத்தின் திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களே செம்மரம் வெட்ட வருவதாகவும், கூலிக்காக செம்மரங்களை வெட்ட வந்தாலும், அவர்களை கடத்தல்காரர்களாகவே கருத முடியும் என்றும் காந்தாராவ் தெரிவித்தார். செம்மரம் வெட்டவருவோர் துப்பாக்கிகளை கொண்டுவருவதால், தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன