Advertisement

சென்னை புத்தகக் கண்காட்சி திங்கட் கிழமையுடன் நிறைவடைய உள்ள நிலையில், 15 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகும் என எதிர்பார்ப்பு

சென்னை புத்தகக் கண்காட்சி திங்கட் கிழமையுடன் நிறைவடைய உள்ள நிலையில், 15 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவின டிஜிட்டல் யுகத்தால் புத்தக வாசிப்பு குறைந்து விடவில்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, தென்னிந்திய புத்தகவிற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் 41 வது புத்தகக் கண்காட்சி இளைஞர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. சென்னை அமைந்தகரை செயிண்ட் ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் நூற்றுக்கணக்கான அரங்குகளில் கோடிக்கணக்கான புத்தகங்களுடன் கடந்த 10ம் தேதி துவங்கிய புத்தகக் கண்காட்சி திங்கட்கிழமையுடன் நிறைவடைய உள்ளது. கடந்த ஆண்டு புத்தகக்காட்சியில் 10 லட்சம் புத்தகங்கள் விற்பனையான நிலையில் இந்த ஆண்டில் சனிக்கிழமை வரை 12 லட்சம் புத்தகங்களை 9 லட்சம் வாசகர்கள் வாங்கிச் சென்றுள்னர். கடைசி இரண்டு நாட்களில் மேலும் 3 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டித் தேர்வுகள். நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளை தமிழ் வழியில் விளக்கும் புத்தகங்களுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது.

புத்தகங்களை வாங்கிச் சென்ற 9 லட்சம் பேரில் பெரும்பான்மையானோர் இளைஞர்கள் தான். அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைப்பது நிறைவை தருவதாக கூறுகின்றனர் வாசகர்கள்.

இதனிடையே திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஆயிரம் பேர் 20 பேருந்துகளில் புத்தகக் கண்காட்சி திடலுக்கு வந்திறங்கினர். மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஜெயக்குமாரின் ஏற்பாட்டின் பேரில் இவர்கள் அழைத்துவரப்பட்டிருந்தனர். ஆசிரியர்களின் புத்தக அறிவு அவர்களிடம் பயிலும் அத்தனை மாணவர்களையும் சென்றடைவதோடு, அவர்களிடத்திலும் புத்தக ஆர்வத்தை தூண்டும் என முதன்மைக் கல்வி அதிகாரி ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.

பழந்தமிழ் இலக்கியம், முதல் மல்டி மீடியா உலகம் வரை, ஆன்மீகம் முதல் பகுத்தறிவு வரை என பேதமின்றி குவிந்திருக்கும் புத்தகங்களை வாங்க அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டுகின்றனர். பொத்தானை சொடுக்கினால் தகவல் வந்து சேரும் கணினி உலகிலும் புத்தகங்களுக்கான தேவை குறையவில்லை என்பதை காட்டும் விதமாக இது போன்ற புத்தகக் கண்காட்சிகளுக்கு ஆண்டுக்கு ஆண்டு வரவேற்பு அதிகரித்தே வருகிறது…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன