Advertisement

சென்னையில் மாடித்தோட்டத்தில் காய்கறிகள் பயிர் செய்வதை ஊக்குவிக்க புதிய முயற்சி

வானுயர்ந்த கட்டிடங்களுடன் கான்கிரீட் காடாய் மாறிப்போன சென்னையில் இயற்கை விவசாயத்தை, அனைத்து இல்லங்களுக்கும் மாடித்தோட்டமாக கொண்டு சேர்க்கும் முயற்சியை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை மேற்கொண்டு வருகின்றது

1800 மூங்கில் கூடைகளில்… 16000 சதுர அடி இடத்தில்….. அன்றாடம் வீட்டு சமையலுக்கு தேவையான அனைத்து வகையான காய்கறிகளும் விளைவிக்கப்படும் இந்த இடம் சென்னையின் மையப்பகுதியான நுங்கம் பாக்கத்தில் உள்ளது.

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் கீழ் இயங்கும் அன்னை தெரசா மகளிர் மைய கட்டிடத்தின் 4 வது மாடியில் தான் இந்த வியப்பிற்குரிய மாடித்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் முழுக்க முழுக்க இயற்கை உரங்களை கொண்டு மூங்கில் கூடைகளில் பயிரிடப்பட்டுள்ளதால் இங்கு விளையும் காய்கறிகளும் கீரை வகைகளும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அற்புதவரமாய் அமைந்துள்ளது. மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு இந்த மாடித்தோட்டத்தை அமைப்பது மற்றும் பராமரிப்பது குறித்து இலவச பயிற்சி அளிக்கப்படுவதால் வெளியூர்களில் இருந்தும் பட்டதாரி பெண்கள், பயிற்சி மையத்தை தேடி வருகின்றனர்

தங்காளி, வெண்டைக்காய், நூக்கோல்,கேரட், பீட்ரூட், கத்தரி, வெங்காயம் போன்ற செடிக்காய்கறிகளும், அவரை, பூசனி, சுரைக்காய், புடலை போன்ற கொடி காய்கறிகளும் கூடையில் பதியமிட்டு வளர்க்கப்படுகிறது. கொடிகள் படர்வதற்கு சுற்று சுவரின் மேல் சவுக்கு கம்புகளை கொண்டு கயிற்றாலான கொடிப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது

இங்குள்ள கூடைகளில் காய்கறி கூடைகளுக்கு இடையில் அரைக்கீரை, பருப்புகீரை, சிறுகீரை,புளிச்சகீரை, மணத்தக்காளி கீரை, பொன்னாங்கன்னி கீரை என 154 வகை கீரைகள் பயிர்செய்யப்பட்டுள்ளது. காலை மற்றும் மாலை வேளையில் நடைபயிற்சிக்கு வருவோர் உடலுக்கு அரோக்கியத்தை தரும் கீரைவகைகளை நேரடியாக இந்த தோட்டத்துக்கே வந்து வாங்கிச்செல்வதாக ஊழியர்கள் தெரிவித்தனர்

தினமும் 1500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை கீரை விற்பனையில் கிடைப்பதாகவும், சென்னைவாசிகளுக்கு மொட்டை மாடியில் இது போன்ற மாடித்தோட்டங்களை அமைப்பதற்கு ஊக்கம் கொடுத்து பயிற்சி அளிப்பதே முக்கிய நோக்கம் என்கின்றனர் ஊழியர்கள். மேலும் மாடித்தோட்ட பயிர்களை இயற்கை முறையில் எப்படி உரம் கலந்து வளர்ப்பது என்பதற்கு செய்முறை விளக்கத்தையும் அளிக்கின்றனர்.

மீத்தேன் நீக்கப்பட்ட சாணம், தேங்காய் நார், வளம் மிக்க செம்மண் கூடையில் நிரப்பி நல்ல தரமான நாட்டு விதைகளை பதியமிட்டு செடிகள் வளர்க்கப்படுகின்றன. தடுப்பு கட்டைகள் மீது வைக்கப்பட்டுள்ள செடி கூடைகளுக்கு சிறிதளவே தண்ணீர் ஊற்றப்படுவதால் மாடியும் தூய்மையாக இருக்கிறது . நீரும் வீணாவதில்லை..!

விவசாயம் செய்வதற்கு இனி கிராமங்களை தேடிச்செல்ல வேண்டியதில்லை, இது போன்று மாடியில் தோட்டம் அமைத்தால், மொட்டை மாடியிலேயே நல்ல தரமான காய்கறிகளை உற்பத்தி செய்து உண்டு ஆரோக்கியமாக வாழலாம்..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன