Advertisement

சென்னையில் போகி கரும்புகை, கடும் பனி மூட்டம் எதிரொலி – விமானங்கள் தரையிறங்க முடியாமல் பல மணி நேரம் தாமதம்

சென்னையில் இன்று கடும் பனிமூட்டத்துடன், புகையும் சூழ்ந்து கொண்டதால் சாலை மற்றும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மார்கழி மாதம் கடைசி நாளான இன்று போகிப் பண்டிகை என்பதால் சென்னையில் பல்வேறு இடங்களில் பழைய பொருட்களை மக்கள் தீயிட்டுக் கொளுத்தினர். இளைஞர்கள், சிறுவர்கள் டயர்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை எரித்து போகியை உற்சாகமாக கொண்டாடினர். சாலை ஓரங்களில் இளைஞர்கள், நெருப்பை உண்டாக்கி மேளம் இசைத்து உற்சாக நடனமாடினர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை பனிமூட்டம் வழக்கத்துக்கு மாறாக அதிகமாக காணப்பட்டது. பனிமூட்டத்துடன், புகை மூட்டமும் சேர்ந்து கொண்டதால் காற்று மாசு ஏற்பட்டது. சாலையில் 10 அடி தொலைவில் உள்ள பொருட்களைக் கூட காண முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இருசக்கர வாகனங்கள், கார்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன. விபத்து ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சத்தில் வாகன ஓட்டிகள் மெதுவாகவே வாகனங்களை இயக்கினர்.

பனிப்புகை மூட்டத்தால், வெள்ளை ஆடைகள் அணிந்து சென்றவர்களின் நிலை பரிதாபமானது. விமான நிலையத்தில் அளவுக்கு அதிகமான பனிப் புகை சூழ்ந்து கொண்டதால், 12 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. 30 விமானங்கள் தாமதாகவே புறப்பட்டுச் சென்றன. சென்னை – காஞ்சிபுரத்தை ஒட்டிய நகர்ப் பகுதிகள் பெரும்பாலும் பனிப்புகையால் சூழப்பட்டிருந்தன. பெருங்களத்தூர், தாம்பரம் முதல் கத்திப்பாரா, வடபழனி, ராயப்பேட்டை என அனைத்துப் பகுதிகளிலும் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டதால், வாகனங்களை இயக்குவதே சவாலானதாக இருந்தது. காலை 8 மணிக்குப் பின்னரே ஓரளவுக்கு நிலைமை சரியானது.

காலை 9 மணிக்கு மேல் பனி மற்றும் புகை மூட்டம் மறைந்ததால் சென்னை விமான நிலையத்தில் விமான இயக்கங்கள் சீராகின. இதனிடையே அதிகளவிலான பனிப்பொழிவு காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே அரப்பேடு என்ற இடத்தில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார். பனிமூட்டத்தால் பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சங்கிலித் தொடர் விபத்து நிகழ்ந்தது. மினி வேன், கார்கள் தொடர்ந்து மோதிக் கொண்டதில் 11 பேர் காயம் அடைந்தனர்.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் அதிக பனிப்புகை மூட்டம் காணப்பட்டது. இதனால் வாகனங்கள் ஆமை வேகத்தில் இயங்கிய நிலையில், கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் செல்லும் மின்சார ரயில்களும் மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்திலேயே இயக்கப்பட்டன. முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியும், தொடர்ந்து ஹாரன் ஒலித்தபடியும் ரயில்கள் இயக்கப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன