Advertisement

சென்னையில் பெண் மென்பொறியாளரை கொடூரமாக தாக்கி வழிப்பறி

சென்னையில் பெண் மென் பொறியாளரை நள்ளிரவில் வழிமறித்து கத்தியால் சரமாரியாக தாக்கி நகைகளை பறித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த தாழம்பூரில் வசித்து வருபவர் லாவண்யா. நாவலூரில் உள்ள குளோபல் இன்ஃபோடெக் என்ற மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிறுவனம் கிண்டியிலும் செயல்பட்டு வருவதால், கிண்டி அலுவலகத்தில் வேலை முடித்துவிட்டு நள்ளிரவு தனது இரு சக்கர வாகனத்தில் லாவண்யா வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். பள்ளிகரணை, பெரும்பாக்கம் வழியாக வீட்டிற்கு சென்றுள்ளார். அரசன் கழனி என்ற பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்த போது 1 மணியளவில் திடீரென இரண்டு மர்ம நபர்கள் லாவண்யாவை வழி மறித்துள்ளனர். அந்த பகுதியில் அவர் கூச்சலிட்டாலும் உதவுவதற்கு கூட யாரும் இல்லாத பகுதி. கத்தியுடன் நின்ற இருவரும் லாவண்யாவை சரமாரியாக தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த 15 சவரன் நகைகள், ஐ போன் ஆகியவற்றை பறித்து கொண்டு கொள்ளையர்கள் தப்பிவிட்டனர்.

ரத்த வெள்ளத்தில் சாலையின் நடுவே நின்று கொண்டிருந்த பெண்ணை அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் பார்த்துவிட்டு பயத்தில் உதவி செய்யாமல் தாழம்பூரில் நின்று கொண்டிருந்த ரோந்து போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தலை, கை உள்ளிட்ட 5 இடங்களில் வெட்டு காயங்களுடன் படுகாயமடைந்த மென் பொறியாளர் லாவண்யாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி கூட்டுக் கொள்ளை, தாக்குதல், பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்குதல், திட்டமிட்டு வழிப்பறி செய்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதவு செய்துள்ள பள்ளிக்கரணை போலீசார், மர்ம நபர்களை துணை ஆணையர் முத்துசாமி தலைமையில் 5 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் வழிப்பறியில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல் கொலை செய்யும் முயற்சியில் கொடூரமாக கத்தியால் வெட்டியுள்ளதால் காவல் துறையினருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. தாக்குதலுக்குள்ளான பெண்ணின் ரத்தம் சாலையில் இருந்து அருகில் புதர் பகுதி வரை சிந்தியுள்ளது. எனவே பலாத்கார முயற்சியில் புதர் வரை இழுத்துச் சென்றார்களா என சந்தேகம் எழுந்துள்ளது. சம்பவம் நடந்த பகுதிக்கு அருகே அரசன் கழனியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் வீடும் உள்ளது.

எனவே தெரிந்த நபர்கள் யாரேனும் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நினைவு திரும்பினால் இது குறித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த வெறிச் செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை கண்டறிய பெரும்பாக்கம் – நாவலூர் சாலையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன