சுற்றுச்சூழல் வரியாக வசூலித்த தொகையை அதற்காக செலவிடவில்லை என டெல்லி ஆம்ஆத்மி அரசு மீது புகார்

டெல்லியும், அதனைச் சுற்றியுள்ள பகுதியும் புகை மண்டலப் போர்வைக்குள் மூச்சுத் திணறி வரும் சூழலில், காற்றுமாசை கட்டுப்படுத்த பல்வேறு வழிகளில் வசூலிக்கப்பட்ட சுமார் இரண்டாயிரத்து 300 கோடி ரூபாயும் செலவிடப்படாமலேயே தேங்கிக் கிடப்பதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், டெல்லிக்குள் நுழையும் கனரக வாகனங்களிடம் சுற்றுச்சூழல் இழப்பீடாக இதுவரை ஆயிரத்து மூன்று கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுபோக, டெல்லிக்குள் நுழையும் கனரக வாகனங்கள் பயன்படுத்தும் டீசலுக்கு, கடந்த 2008ஆம் ஆண்டு முதல் மாசுக்கட்டுப்பாட்டுக்கான வரியாக சுமார் 500 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லிக்குள் டீசல் கார்களை விற்பனை செய்யும் டீலர்களிடம் இருந்து ஒரு சதவீதம் சுற்றுச்சூழல் வரியாக 62 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டுக்காக வசூலிக்கப்பட்ட இந்தத் தொகைகளை, டெல்லி போக்குவரத்துக் கழகத்திடம் டெல்லி மாநகராட்சி ஒப்படைத்துள்ளது.

வாகனப்போக்குவரத்தால் ஏற்படும் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில், எலக்ரிக் பேருந்துகளை வாங்க இந்த நிதியைப் பயன்படுத்த டெல்லி போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டிருந்தது. ஆனால், எலக்ட்ரிக் பேருந்துகள் அதிக விலை கொண்டவை என்பதால், அதற்கான மானியத்திற்காக காத்திருப்பதாக டெல்லி போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனிடையே, டெல்லி மாநிலத்தின் ஆம்ஆத்மி அரசு சுற்றுச்சூழல் வரியாக இதுவரை 787 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாகவும், அதில் 93 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டிருப்பதாகவும் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிலில் தெரிய வந்துள்ளது.

நாட்டின் தலைநகர் புகை மண்டலத்திற்குள் சிக்கிச் திணறி வரும் நிலையில், அதற்காக வசூலிக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தாமல் அரசின் பல்வேறு துறையினரும் அலட்சியம் காட்டி வந்திருப்பதாக டெல்லி வாழ் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனிடையே, தரம் உயர்த்தப்பட்ட பி.எஸ் – 6 (BS VI) பெட்ரோலை, இந்த ஆண்டு இறுதிக்குள் டெல்லியில் மட்டும் புழக்கத்துக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய எரிசக்தித்துறை அமைச்சகம், எண்ணெய் நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன