சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது குறித்து அடுத்த கட்ட அறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை நவம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், சென்னையைச் சேர்ந்த ஞானம் என்பவர் தொடர்ந்த வழக்கில், சீமைக்கருவேல மரம் தடைசெய்யப்பட்ட மரம் கிடையாது என்றும், அது வறட்சி ஏற்படுத்தும் என்பதற்கான அறிவியல் பூர்வ ஆதாரம் இல்லை என்பதால் மரங்களை அகற்றும் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியிருந்தார்.

இந்நிலையில், சீமைக்கருவேல மரங்களை அகற்ற இடைக்காலத் தடை விதித்த உயர்நீதிமன்றம், அதன் தன்மை குறித்து ஆராய அரசு சார்பில் சிறப்பு வல்லுனர்கள் குழு அமைத்தது. வனத்துறை, சுற்றுச்சூழல், பொதுப்பணித்துறையில் உள்ள வல்லுநர்கள் அடங்கிய அந்த குழு முதல் கட்ட அறிக்கையை இரு மாதங்களுக்கு முன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் சீமைக்கருவேல மரம் வறட்சியை ஏற்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருப்பதாக ஆரம்பகட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு வெள்ளியன்று மீண்டும் தலைமை நீதிபதி தலைமையிலான முழு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது வல்லுனர் குழு அடுத்த கட்ட அறிக்கையை தாக்கல் செய்தது. அதன்படி, சீமைக்கருவேல மரங்களால் பெரியளவிற்கான பாதிப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனிடையே, இந்த வழக்கின் இடை மனுதாரரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ, அறிக்கையை ஆய்வு செய்ய அவகாசம் கோரினார். இதையடுத்து வழக்கின் விசாரணையை நவம்பர் 22-ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன