சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற வியாபாரி – காவல்துறையினரின் அலட்சியத்தால் தப்பி ஓட்டம்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற வியாபாரியை இளைஞர்கள் பிடித்து வைத்திருந்தும், தாமதமாக வந்து தப்பவிட்ட காவல்துறையினரின் அலட்சியம்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள நியூடெல்லி என்று அழைக்கப்படுகின்ற சுத்திகாபாத்தில் உள்ள வீடுதான் கஞ்சாவியாபாரி இசாத் என்பவனின் கோட்டை..! என்கின்றனர் இப்பகுதி இளைஞர்கள். இங்கு இருந்து தான் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் கஞ்சா சப்ளை செய்யப்படுவதாகவும் அதனை சிறுவர்கள் பலர் வாங்கிச்சென்று போதைக்கு அடிமையாகி சீரழிவதாகவும் அந்தபகுதி இளைஞர்கள் புகார் தெரிவித்தனர்.

அங்கு விரைந்தது பாலிமர் செய்திக்குழு… அங்கு மீசைக்கூட அரும்பாத சிறுவன் ஒருவனை கையில் கஞ்சா பாக்கெட்டுடன் அப்பகுதி இளைஞர்கள் பிடித்து வைத்திருந்தனர். அந்த சிறுவனிடம் கஞ்சா எங்கு விற்கப்படுகின்றது ? என்று கேள்வி எழுப்ப… அவன், தான் கஞ்சா வாங்கிய வீட்டை அடையாளம் காட்டுவதாக அங்கிருந்தவர்களை அழைத்துச்சென்றான். சிறிது தூரம் நடந்து சென்றதும் அங்கிருந்த கஞ்சா வாங்கிய வியாபாரி இசாத்தின் வீட்டை அடையாளம் காட்டினான் சிறுவன்.

அந்த வீட்டின் வாசலில் நின்று சிறுவன் கஞ்சா வியாபாரியை அழைத்தான் வீட்டிற்கு வெளியில் பெரிய கூட்டம் இருப்பதை பார்த்தாலும் அசராமல் வெளியே வந்தான் கஞ்சா வியாபாரி இசாத்..! அந்த சிறுவன் இசாத்திடம் கஞ்சா வாங்கியாதாக கூற, அவரோ தனக்கு அந்த சிறுவனை யார் என்றே தெரியாது என்று கூறினார்

நிலமை மோசமாவதை கண்டு வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் ராஜசேகருக்கும், உளவு பிரிவு காவலர்களுக்கும் இந்த பகிரங்க கஞ்சாவிற்பனை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. சொல்லி வைத்தார் போல காவலர்கள் யாரும் அங்கு வரவில்லை..! ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக அந்த பகுதி இளைஞர்களும் கஞ்சா வியாபாரி நிசாத்தை பிடித்து வைத்திருந்தனர்.

காவல்துறையினர் வர தாமதமானதை பயன்படுத்தி கஞ்சாவியாபாரி இசாத் தப்பிச்சென்று விட்டான். சினிமாவில் கிளைமாக்சில் வருவதுபோல கஞ்சாவியாபாரி தப்பிச்சென்றபின்னர் சாவகாசமாக வந்தார் காவல் ஆய்வாளர் ராஜசேகர்..! பெயருக்கு கஞ்சா வியாபாரியின் வீட்டில் சோதனை நடத்தினார் அங்கு இருந்த இருவரை பிடித்து பிளாஸ்டிக்க் கவரில் இருந்த சில கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றியது காவல்துறை. உடன் சென்ற நமது செய்தி குழுவினர் சுட்டிக்காட்டியதால் அந்த வீட்டில் லுங்கி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் சேர்த்து கைப்பற்ற வேண்டிய நிலை காவல்துறைக்கு ஏற்பட்டது ..!

சின்னஞ்சிறுவர்களுக்கு கூட தெரிந்த கஞ்சா வியாபாரியின் வீடு ஏன் இதுவரை உளவுப்பிரிவு காவலர்களுக்கும் , வாணியம்பாடி காவல் நகர ஆய்வாளருக்கும் தெரியாமல் போனது என்பது தான் வினோதமாக இருந்தது..!

சிறுவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் இத்தகைய சமூக விரோதிகள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!