சர்தார் சரோவர் அணைக்கு உலக வங்கி நிதி தர மறுத்தும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி

சர்தார் சரோவர் அணைக்கு உலக வங்கி நிதி தர மறுத்தாலும், தற்போது கட்டிமுடிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மிகப்பெரிய சர்தார் சரோவர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் நரேந்திர மோடி, தபோய் ((Dabhoi)) என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், உலகில் இதுவரை எந்த திட்டமும் சந்திக்காத பல தடைகளை, சர்தார் சரோவர் அணை சந்தித்துள்ளதாகவும், ஆனால், ரத்தமும் வேர்வையும் சிந்தி அணை கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த திட்டத்துக்கு முதலில் நிதி உதவி தர முன்வந்த உலக வங்கி, பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றதை அடுத்து, சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனக் கூறி, நிதி உதவி தர மறுத்துவிட்டதாக மோடி தெரிவித்தார். ஆனால், உலக வங்கி நிதி தந்ததாலும், தராவிட்டாலும் அணையை கட்டிமுடிக்க முடிவு செய்யப்பட்டதாக கூறிய அவர், பாசனம் மற்றும் நீர்வழிப் பாதைகளில் கவனம் செலுத்திய சர்தார் வல்லபாய் பட்டேலையும் டாக்டர் அம்பேத்கரையும் நினைவுகூர வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார். குறைவான பொருளாதார வளர்ச்சிக்கு தண்ணீர் பற்றாக்குறை மிக முக்கிய காரணம் என்று குறிப்பிட்ட பிரதமர், சர்தார் சரோவர் அணை கட்டுமானப் பணிகளில் குஜராத் மாநில துறவிகளும், மடாதிபதிகளும் மிக முக்கியப் பங்கு வகித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

குஜராத் மாநில விவசாயிகள் மட்டுமின்றி, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநில விவசாயிகளும் பயன் பெறுவார்கள் என்றும், சர்தார் சரோவர் அணை பொறியியல் அதிசயம் என்றும் பிரதமர் மோடி கூறினார். நர்மதா ஆற்றில் தேக்கி வைக்கப்படும் நீரால், ஏராளமான பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என்று கூறிய பிரதமர் மோடி, தமது பிறந்தநாளில் சர்தார் சரோவர் அணையை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன