சசிகலா குடும்பத்தினர், உறவினர்களிடம் நடத்தப்பட்ட ரெய்டு, வரலாற்றியே இல்லாத அளவுக்கு பிரமாண்ட ரெய்டு

சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், ஆதரவாளர்களிடம் 5 நாட்கள் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை மூலம், கணக்கில் காட்டாத ஆயிரத்து 430 கோடி ரூபாய் சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளன.

சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்களை குறிவைத்து, வருமான வரித்துறை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, 187 இடங்களில் 5 நாட்களுக்கு பிரம்மாண்ட சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை மூலம் 7 கோடி ரூபாய் பணம், 5 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள நகைகள், அசையா சொத்துகள் மீது செய்யப்பட்ட விரிவான முதலீடுகள் பற்றிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 15 வங்கி லாக்கர்களும் முடக்கப்பட்டுள்ளன. இதேபோல, கணக்கு காட்டுவதற்காக பெயரளவுக்கு செயல்பட்டு வந்த போலி நிறுவனங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதன் மூலம் ஆயிரத்து 430 கோடி ரூபாய் அளவுக்கு, கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு செய்யப்பட்ட வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது இறுதி செய்யப்பட்ட மதிப்பீடு அல்ல என்றும், ஆவணங்கள் தொடர்ந்து மதிப்பிடப்பட்டு வருவதாலும், லாக்கர்கள் இன்னும் திறக்கப்படாததாலும், கைப்பற்றப்பட் வைரங்கள் இன்னும் மதிப்பிடப்படாததாலும் கணக்கில் காட்டப்படாத வருமானத்தின் அளவு மாறலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வருமான வரி சோதனை முடிவடைந்து விட்ட நிலையில், 187 இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருவதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சோதனை முடிந்த பிறகு ஜெயா டிவி மற்றும் ஜாஸ் சினிமாஸ் சிஇஓ விவேக் ஜெயராமனை வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுமார் ஐந்து மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், விசாரணைக்காக முதல் கட்டமாக சசிகலாவுக்கு மிக நெருக்கமான உறவினர்கள் 20 பேருக்கு சம்மன் அனுப்ப வருமான வரி புலனாய்வுத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இன்று ஆஜராகுமாறு சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல, மிடாஸ் இயக்குநர் டாக்டர் சிவக்குமார், அவரது மனைவி பிரபா, டிடிவி தினகரன் மனைவி அனுராதா, ஜெயா டிவி சிஇஓ விவேக் ஜெயராமன், சசிகலாவின் அண்ணன் மகள்கள் கிருஷ்ணப்ரியா, ஷகிலா, டிடிவி தினகரனின் சகோதரர் பாஸ்கரன், டாக்டர் வெங்கடேஷ், கலியபெருமாள் உள்ளிட்டோர் முதல்கட்டமாக விசாரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன