சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணபிரியா வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜர்

வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, ஜெயா டி.வி மேலாளர் நடராஜ் ஆகியோர் விளக்கம் அளித்தனர். தமிழகம் முழுவதும் நடந்த வருமான வரித்துறை சோதனை முடிவடைந்த நிலையில், 3வது நாளான இன்று ஜெயா டி.வி. மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் பொது மேலாளர் நடராஜ் இன்று, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார். 2 மணி நேர விசாரணைக்குப் பின் நடராஜ் புறப்பட்டுச் சென்ற நிலையில், இளவரசின் மகள்கள் கிருஷ்ணப்பிரியா மற்றும் ஷகிலா ஆகியோர் தங்களது கணவர்களுடன் விசாரணைக்கு ஆஜராகினர்.

அறக்கட்டளை ஒன்றை நடத்தி வரும் இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணப்பிரியா, சசிகலா குடும்பத்தின் 6 நிறுவனங்களுக்கு இயக்குநராகவும் உள்ளார். அதேபோல் அவரது கணவர் கார்த்திகேயன், ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் ஆலை உள்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் இயக்குநராகவும் இருக்கிறார். அவர்களிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கியப் பின் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இளவரசியின் 2வது மகள் ஷகிலா மற்றும் அவரது கணவர் ராஜராஜன் ஆகியோர் வெளிநாடுகளில் இருந்து கார்களை இறக்குமதி செய்ததில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதனால், கார் இறக்குமதி செய்தது தொடர்பான ஆவணங்களை கேட்டிருந்த வருமான வரித்துறை அதிகாரிகள், அது குறித்து ஷகிலா மற்றும் அவரது கணவரிடம் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஏற்கெனவே விசாரணைக்கு ஆஜரான டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி, இன்று மீண்டும் வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன