கோவை மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு

கோவையில், மாநில அமைச்சர்கள் யாரையும் அழைக்காமல் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடன் கோவை மாநகரில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை நடத்தியுள்ளார்.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவை மாநகர் இடம்பெற்றுள்ளது. இதனால், அங்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கோவை சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ரெட்ஃபீல்ட் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆளுநரின் தனிச் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், மாவட்ட எஸ்.பி. மூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை முதன்மை பொறியாளர்கள் உள்பட 12 பேர் பங்கேற்றனர்.

அப்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக மத்திய அரசிடம் பெறப்பட்ட நிதி குறித்து கேட்டறிந்த ஆளுநர், இதுவரை எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்றும், வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்னும் எவ்வளவு நிதி தேவை என்றும் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு உள்ளூர் எம்.எல்.ஏ.க்கள், மற்றும் மாநில அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில், தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவன நிர்வாகிகளுடன் ஆளுநர் மூன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பாலசுப்ரமணியன் ஆகியோரும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.. கூட்டம் முடிந்த பின்னரே ஆளுநரை சந்தித்து பேசியுள்ளனர். அதே சமயம், பா ஜ க மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் 10 பேர் ஆளுநரை சந்திக்க உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளார்களிடையே பேசிய அமைச்சர் எஸ் பி வேலுமணி, ஆளுநர் அதிகாரிகளை சந்தித்துப் பேசியது ஆரோக்கியமான செயல் என்றும், இதில் எந்த சர்ச்சையும் இல்லை என்றும் தெரிவித்தார்.

ஆளுநர் தனக்கு உள்ள அதிகார வரம்பிற்குள் செயல்படுவதாக தன்னிடம் உறுதியளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார். மாநில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களை அழைக்காமல் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பது தமிழகத்தில் வழக்கத்திற்கு மாறான புதிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மாநில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களை அழைக்காமல் ஆளுநர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பது மாநிலத்தின் உரிமையைப் பறிக்கும் வகையில் உள்ளது எனக் கூறி தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராம கிருஷ்ணன் தலைமையில் ஆறுபேர், அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்லும் வழியில் போராட்டம் நடத்த முற்பட்டனர். அவர்களை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன