கோவையில் சுகாதார வளாகத்தைப் பார்வையிட்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டார் ஆளுநர் பன்வாரிலால்

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவை மாநகர் இடம்பெற்றுள்ளது. இதனால், அங்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நேற்று கோவை சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ரெட்ஃபீல்ட் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆளுநரின் தனிச் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், மாவட்ட எஸ்.பி. மூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை முதன்மை பொறியாளர்கள் உள்பட 12 பேர் பங்கேற்றனர்.

அப்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக மத்திய அரசிடம் பெறப்பட்ட நிதி குறித்து கேட்டறிந்த ஆளுநர், இதுவரை எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்றும், வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்னும் எவ்வளவு நிதி தேவை என்றும் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு உள்ளூர் எம்.எல்.ஏ.க்கள், மற்றும் மாநில அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில், தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவன நிர்வாகிகளுடன் ஆளுநர் மூன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர் எஸ் பி வேலுமணி, ஆளுநர் அதிகாரிகளை சந்தித்துப் பேசியது ஆரோக்கியமான செயல் என்றும், இதில் எந்த சர்ச்சையும் இல்லை என்றும் தெரிவித்தார்.

ஆளுநர் தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டதாகவும், மாநில சுயாட்சிக்கு எதிரானது என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். பட்டமளிப்பு விழாவிற்கு சென்ற ஆளுநர் அரசின் திட்டப் பணிகளைப் பார்வையிட்டது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே, கோவையில் இரண்டாவது நாளாக ஆளுநர் பன்வாரிலால் இன்று காலை ஆய்வுப் பணியில் ஈடுபட்டார். காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சுகாதார வளாகத்தைப் பார்வையிட்ட அவர், தூய்மைப் பணியை மேற்கொண்டார். ஆய்வின் போது அமைச்சர் வேலுமணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

(breath)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன