கோயம்பேடு சந்தையில் 729 கடைகளுக்கு சீல் வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை கோயம்பேடு சந்தையில் சொத்து வரி செலுத்தாத 729 கடைகளுக்கு 2 நாட்களில் சீல் வைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி சொத்து வரி செலுத்த வலியுறுத்தி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, கோயம்பேடு சந்தையில் ஒதுக்கீடு பெற்றவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கோயம்பேடு சந்தையில் 2 ஆயிரத்து 325 கடைகளில், ஆயிரத்து 596 கடை உரிமையாளர்கள் மட்டுமே வரி செலுத்தியிருப்பதாகவும், 729 கடைகள் உரிமையாளர்கள் சொத்து வரி செலுத்தவில்லை என்றும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு வரித்தொகை மாற்றி அமைக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது. அப்போது குறிக்கிட்ட நீதிபதி கிருபாகரன், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட வேண்டிய வரித்தொகையை ஏன் இத்தனை ஆண்டுகளாக மாற்றியமைக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார். மேலும், அரசியல் ஆதாயத்துக்காக மாநகராட்சி அதிகாரிகள் சொத்து வரியை மாற்றியமைக்கும் பணியை புறக்கணித்து வருவதாக குற்றஞ்சாட்டிய நீதிபதி கிருபாகரன், 19 ஆண்டுகளாக வரித்தொகை மாற்றியமைக்காத போதும், பழைய வரியை செலுத்த மறுக்கும் 729 கடை உரிமையாளர்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.

போலீஸ் பாதுகாப்புடன் சொத்து வரி செலுத்தாத 729 கடைகளுக்கும் 2 நாட்களில் சீல் வைக்க உத்தரவிட்ட நீதிபதி, இது தொடர்பாக ஜூலை 20ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையையும் ஒத்திவைத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!