Advertisement
Advertisement

கேளிக்கை வரியை 8% குறைக்க தமிழக அரசு ஒப்புதல் – திட்டமிட்டபடி வெளியாகிறது மெர்சல்

கேளிக்கை வரியை 8 விழுக்காடாக குறைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து, நடிகர் விஜயின் மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்கள் திட்டமிட்டபடி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேளிக்கை வரியை நீக்கும் வரை புதிய படங்களை வெளியிடாமல் தயாரிப்பாளர் சங்கம் போராட்டம் நடத்தி வந்தது.

இந்நிலையில் கேளிக்கை வரி தொடர்பாக இன்று தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் கேளிக்கை வரியை 8 சதவீதமாகக் குறைத்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

முன்னதாக பேசிய தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், கேளிக்கை வரி 8 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளதால் மெர்சல் உள்ளிட்ட படங்கள் திட்டமிட்டபடி வெளியாகும் என்றார்.

திரையரங்குகளில் உள்ள கேன்டீன்களில் எம்.ஆர்.பி விலையில் மட்டுமே பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்று விஷால் வலியுறுத்தினார். திரையரங்குகளில் பத்து ரூபாய் விலையில் அம்மா குடிநீர் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பின்னர் பேசிய அபிராமி ராமநாதன், தற்போதே திரையரங்குகளில் எம்.ஆர்.பி விலையில் தான் பொருட்கள் விற்பதாக தெரிவித்தார். தமிழக அரசு அனுமதித்தால் திரையரங்குகளில் பத்து ரூபாய் விலையில் அம்மா குடிநீர் விற்பனை செய்ய தயார் என்றும் அபிராமி ராமநாதன் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன