கேரளாவுக்கு செல்கிறது மலேசிய மணல்..!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணலை விற்பனை செய்வது தொடர்பான விதிகளில் திருத்தம் செய்யலாமே என தமிழக அரசிடம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலைச் சேர்ந்த எம்.ஆர். ராமையா என்டர் பிரைசஸ் நிறுவனம் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 53 ஆயிரம் மெட்ரிக் டன் மணலை தூத்துக்குடி துறை முகத்தில் இருந்து வெளியே எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அந்நிறுவனத்தின் சார்பில் மார்த்தாண்டத்திற்கு 6 லாரிகளில் அனுப்பப்பட்ட மணலையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து அந்நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, விசாரணை முடியும் வரை தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டிருக்கும் மணலுக்கு அன்றாடம் கட்டணம் வசூலிக்கத் தடைவிதித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், அந்த வழக்கு மீண்டும் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் மணலை விற்பனை செய்ய முறையான அனுமதி பெறப்படவில்லை என்றும், மேலும் அது சிலிகா மணலா என்ற சந்தேகமும் உள்ளதால், துறைமுகத்தை விட்டு வெளியே கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, தூத்துக்குடி துறைமுகத்தில் இருக்கும் மணலை எடுத்துச் செல்ல அனுமதி வழங்குமாறு மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனை செய்வதற்கான விதிகளில் திருத்தம் செய்யலாமே என தமிழக அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். இந்த வழக்கின் விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன