Advertisement

குட்கா விவகாரத்தில் அவை உரிமை மீறல் – மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் 21 பேருக்கு நோட்டீஸ்

சட்டப்பேரவைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை எடுத்துச்சென்ற விவகாரத்தில், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் 21 பேருக்கு, அவை உரிமை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சட்டப்பேரவை உரிமை குழுவின் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அவை உரிமைக் குழு உறுப்பினர்களாக உள்ள அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

இதில், ஜுலை 19ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதிநாளில், குட்கா விவகாரம் குறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தடை செய்யப்பட்ட பொருட்கள் எளிதாக கிடைப்பதாக சில பொருட்களை காட்டியது பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, மு.க.ஸ்டாலினோடு சேர்ந்து, அந்த தடை செய்யப்பட்ட பொருட்களை காட்டிய, 21 திமுக எம்எல்ஏக்களுக்கும், வரும் 5ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்எல்ஏ ரகுபதி, அரசின் கவனத்திற்கு கொண்டுவருவதற்காகவே, அந்த பொருட்களை கொண்டுவந்ததாகவும், அது அவை உரிமை மீறல் அல்ல என்றார்.

மேலும், நடவடிக்கை ஏதாவது எடுக்கப்பட்டால், நீதிமன்றத்தை நாட திமுக தயங்காது என்றும் அவர் கூறினார். சட்டப்பேரவை உரிமை குழு கூட்டத்திற்கு, அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் பங்கேற்கவில்லை.

குட்கா விவகாரத்தில் முதன்மையான புகாருக்கு உரியவர் என்பதால், அவை உரிமைக் குழு உறுப்பினராக இருந்தும் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இந்த விவகாரம் குறித்து கோபாலபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், குட்கா விற்பனையை முழுமையாகத் தடுத்துநிறுத்தக் கோரியதற்காக நடவடிக்கை எடுப்பது ஏற்கத்தக்கது அல்ல என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன